நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு


நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு என்ற தலைப்பைப் படித்தவுடன் ஏதோ பூர்வகுடிக்களின் கதை என்றே தொடங்கினேன். ஆனால் இன்னும் சில காலங்களில் AI  உலவும் மண்ணில் பூர்வகுடிக்களாக மாறப் போகும் நமக்கான புத்தகம். “தண்ணீர்க்காக உயிர் துறந்தவர்களின் வாழ்வுக்கதை” என்று தொடங்கி , தாகமுள்ளவன் தண்ணீரைத் தேடுகிறான், தண்ணீரும் தாகமுள்ளவனைத் தேடுகிறது.. என்று தொடர்கிறது. 

இந்தியாவின் ஜீவநதி, பங்களாதேஷ் வரை பல லட்சம் மக்களின் வாழ்வின் குளிர்மையான கங்கை நதியைப் பாதுகாக்கும் பொருட்டு உயிர் நீத்த இருவர் பற்றியும் , கங்கையைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட “மத்ரி சதன்” ஆசிரமம் பற்றியுமான நூல்.  தன்னறம் நூல்வெளியின் மற்றுமொரு முக்கியமான நூல்.

ஒருவர் துறவி நிகமானந்தா – பொறியியல் படிக்கச் சென்றவர் துறவறம் கொண்டு பின்பு நீரின் வழி கண்ட ஆன்மீகத்தால் கங்கையைப் பாதுகாக்க 114 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர்.
இரண்டாமவர் ஜி.டி.அகர்வால் – சுற்றுச்சூழல் பொறியாளரான இவர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கான்பூரில் 17  ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். கங்கை மாசுபடுவதை எதிர்த்து சுமார் நாற்பது ஆண்டுகளாகப் போராடி 109 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர்.

ஆன்மீகமோ அன்றாடமோ,மனித வாழ்வில் நீரின் தாக்கத்தையும் , நீரின் தாகத்தையும் உணர்த்திச் சென்ற உயிர்கள் மேற்சொன்ன இரண்டு மட்டுமல்ல. இரண்டாமவர் உயிரிழந்த இரண்டு வாரத்தில் மத்ரி சதன் அமைப்பைச் சேர்ந்த 26 வயதான ஆத்மாபோனந்த் உண்ணாநோன்பு தொடங்கியிருக்கிறார். 2019 மார்ச் மாதம் 6 ஆம் தேதியுடன் 127  நாட்கள் கடந்த உண்ணாநோன்பு என்ன ஆனது என்று தெரியவில்லை. இணையத்தில் ஸ்டாலின் பாலுச்சாமி மற்றும் குழுவினர் இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவரைச் சந்தித்தது தாண்டி வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.

புரட்சிகளுக்கும் தியாகங்களுக்கும் இந்த நடைமுறை வாழ்வும், சுயநோக்கம் கொண்ட மனமும் ஒத்துவருவதில்லை. உடல் சார்ந்த தேவைகளுக்கும் மனம் கோரும் கேளிக்கைகளுக்குமாகவே வாழ்வை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். பணம் நோக்கிய பயணத்தில் பசி வெறும் வழிப்போக்கனே.

நீர்க்குடத்தில் பிறந்து மண்ணுக்கும் நெருப்புக்கும் இரையாகும் இந்த வாழ்வில் நீருக்காக மாண்டவர்களுக்கு என்ன செய்வது தெரியவில்லை என்ற அதிர்வோடுதான் புத்தகம் முடிக்கப்பட்டது.


ஆத்மாபோனந்த் பற்றிய தேடலின் இறுதியில் இணையத்தில்  ஒரு செய்தி வந்தது. திருவண்ணாமலை அருகே இருக்கும் வலசைதுருவம் என்னும் கிராமத்தில் மலைகளைப் பறிகொடுத்து நீராதாரம் இழந்து அந்தக் கிராமத்தையே இழக்கும் தருவாயில், காமராசர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கிணறு ஒன்றைத் தூர் வாரி அக்கிராமத்தை மீட்டெடுத்துக் கொடுத்திருக்கின்றனர் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தினர்.  அந்தக் கிணற்றின் நீர்த்தேக்கத் தொட்டியில் நீருக்காக உயிர் துறந்த துறவி நிகமானந்தா அவர்களின் படம் வரைந்து, அதில் 'நெருப்பே தெய்வம், நீரே வாழ்வு' என்றெழுதியிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மலைப்பாக இருக்கிறது.
நீரால் வந்து நீரால் போன அந்த உயிர்கள் நீராகத்தானே இருப்பார்கள் நீராகத்தானே வாழ்வார்கள்.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு