மண்ணில் உப்பானவர்கள்
1930 களில் நடந்த உப்பு சத்தியாகிரகம் நம் வரலாற்றுப் பாடத்தில் ஒரு வரிச் செய்தி. ஆனால் அந்த யாத்திரைக்கான திட்டமிடல், அந்தப் பயணத்தில் கலந்து கொண்டு கொளுத்தும் வெயிலில் கொப்பளித்த கால்கள், போராட்டத்தின் முடிவில் அடித்தளமே ஆட்டம் கண்ட ஆங்கில அரசு, எல்லாவற்றிற்கும் மேலாகப் பட்டிதொட்டி எங்கும் கிளர்ந்து எழுந்த வேட்கை என ஒரு வரலாறாக மாறிப்போன உப்பு சத்தியாகிரகத்தின் கதை "மண்ணில் உப்பானவர்கள்".
காரக் பகதூர் சிங் என்னும் கொலைக் குற்றவாளி தொடங்கிச் சபர்மதி ஆசிரமத்தில் கடுமையான தண்டனைகளை ஏற்றுக் கொண்ட சீடர்கள் வரை, தொடங்கிய நாளிலிருந்து 26 நாட்கள் வரை தினம் தினம் நடந்த நிலங்கள்,பாலங்கள், சேறு என ஒவ்வொன்றையும் மிகுந்த சிரமத்துடன் தொகுத்துள்ளது இந்த நூல். உப்பு சத்தியாகிரகத்தின் ஆரம்பத்தில் அவ்வளவாக உடன்பாடு இல்லாத நேரு, யாத்திரையின் ஒன்பதாம் நாள் மகாத்மாவைக் காண மாரளவு சேறில் நடந்து வந்தது, குறிப்பிட்ட மதம் உள்ள கிராமங்களுக்கு யாத்திரை செல்லவில்லை என்று மகாத்மாவிடம் நேரடியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், குழுவினரிடையே அவ்வப்போது தோன்றிய விரக்தி, சில இடங்களில் ஆடம்பரமாக நிகழ்ந்த சம்பவங்களுக்கு மகாத்மாவின் மன்னிப்புக் கோரல் என யாத்திரையின் நெகிழ்ச்சிகளை அறிய முடிகிறது.
தண்டியாத்திரை பற்றிச் சொல்ல வந்த நூலில் தமிழகத்தில் நடந்த வேதாரண்யம் போராட்டத்தைச் சொல்லியது எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் பொறுப்பைக் காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற்ற இந்த யாத்திரையில் முகமும் முகவரியும் இல்லாத நபர்கள் பற்றி விவரம் தெரிந்தால் தெரிவிக்கச் சொல்லும் அக்கறையும் அதை மறு பதிப்பில் இணைத்துக் கொள்ள இருக்கும் விருப்பமும் பாராட்டுக்குரியது.
அனைத்தையும் விஞ்சி வரிக்கு வரி வியந்து வியந்து உணர்ந்த ஒரு சொல் மகாத்மா. திட்டமிடல், தெளிவான நோக்கு , பின்வாங்காமை, கண்டிப்பு, வலுவற்ற அந்த உடலில் இருந்து வெளிவரும் வலுவான வார்த்தைகள், திறனறிந்து பொறுப்பு கொடுத்தல் , எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று முன்னமறிந்த சூத்திரம் , தீக்குச்சி இல்லாமல் தீப்பந்தம் ஏற்றும் திறன் , தன்னையே மெழுகாக்கும் தியாகம் எனப் பக்கங்கள் அனைத்திலும் மகாத்மா Smart thinker ஆகவும் இருக்கிறார். Hard worker ஆகவும் இருக்கிறார். மகாத்மாவுக்கு ஆயுதம் தேவையில்லை. மகாத்மாவே பேராயுதமாக இருந்திருக்கிறார். அந்தப் பேராயுதனனை இன்னும் அருகில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் தொகுப்பு "மண்ணில் உப்பானவர்கள்".
குறிப்பு (வருத்தமும்) : வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி எழுதும் போது அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை, பங்கேற்றவர்களில் முக்கியமானவர்களான ருக்மணி லட்சுமிபதி, வேதரத்தினம் பிள்ளை, வைத்தியநாத ஐயர் எனப் பலரின் குறிப்புகளைக் கொண்டுள்ள நூலில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் இல்லை. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகத்தான் பெருந்தலைவர் முதன் முதலில் கைது செய்யப்பட்டார். இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆந்திரா சிறையில் அடைக்கப்படுகிறார். தன்னுடைய பாட்டியின் உடல்நிலை மோசமாக இருந்தும் பரோலில் வர மறுக்கிறார். ( மீண்டும் ஒரு நூலில் படித்து உறுதி செய்த பின்பு தான் எழுதுகிறேன்). ஆங்கிலேயருக்கும் மகாத்மாவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகச் சத்தியாகிரத்தில் ஈடுபட்டுக் கைதான அனைவரும் விடுதலையாகும்போது பெருந்தலைவரும் விடுதலையாகிறார். தமிழ்நாட்டின் அந்தப் பேரொளி புத்தகத்தில் இருண்டு இருக்கும் காரணம் தெரியவில்லை.
பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி
Comments