விமரிசனக்கலை
ஒரு சிறுகதை நூலைப் பற்றி இலக்கிய விமரிசனம் செய்பவன் சிறுகதை இலக்கியம் பூராவையுமே
விமரிசிக்கிறான். அது மட்டுமல்ல. அச்சிறுகதை இலக்கிய விமர்சனத்தை ஒரு சாக்காக
வைத்துக் கொண்டு மனித குலத்தில் ஒரு பகுதியினரின் ஒரு மொழி பேசுபவரின் பண்பையே
அளந்து பார்க்கிறான். இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதி தான் உண்டு.
அந்த விதி என்னவென்றால் எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும்
கட்டுப்படுத்தாது என்கிற விதி தான் அடிப்படையான விதி. எதையும் அனுதாபத்தோடு பார்க்க
வேண்டும் என்று சொல்கிறார்கள். இலக்கியத்தில் அனுதாபம் தேவையே இல்லை. இலக்கிய
விமரிசகன் பற்றற்றவனாக நடுநிலையில் நிற்பவனாக இருக்க வேண்டும் என்று பலரும்
சொல்கிறார்கள். அது சாத்தியமே அல்ல. இலக்கிய விமர்சகனுக்கு நான்
சொல்லக்கூடியதெல்லாம் இதுதான். பற்றுக்களை வளர்த்துக் கொள். ஒன்றல்ல நூறல்ல ஆயிரம்
அல்ல பத்தாயிரம் லட்சம் என்று பற்றுக்களை வளர்த்துக் கொள். பற்றை வளர்த்துக்கொண்டு
இலக்கியத்தை ஆயிரம் கோணங்களில் இருந்து ஒருங்கே பார்த்து அனுபவிக்கத் தெரிந்தவன்
தான் நல்ல இலக்கிய விமரிசகன். இலக்கிய வளம் சாத்தியமாவது சோதனை என்கிற ஒரு தீவிரமான
காரியத்தினால் தான் என்று சொல்ல வேண்டும். இலக்கிய வளர்ச்சியின் உயிர்நாடி என்பதே
சோதனை தான் . இலக்கிய அந்தஸ்து முக்கியம். இலக்கிய மரபு முக்கியம். அம் மரபை
எதிர்த்த சோதனைப் புரட்சி முக்கியம். இலக்கிய அமைதி முக்கியம். எல்லாவற்றிற்கும்
மேலாக இலக்கியத் தனித்துவம் (அந்த ஆசிரியரின் பர்சனாலிட்டி) முக்கியம். கோடி
வாசகர்களை விட உண்மை ஒளி என்கிற உள்ள நிறைவு இலக்கியாசிரியருக்குப் பூரணமான தெம்பு
தரக்கூடியது. ஒவ்வொரு சிறுகதையும் ஒரு தனி உலகம். அஃது ஒரு தனி கலை உலகம். அதிலே
சாதிகள் என்றோ கட்டுப்பாடு என்றோ ஒன்றும் கிடையாது. ஒன்று ஒன்று ஒன்றுதான்
முக்கியம் என்று செய்யப்படுவது தான் சிறுகதை. சிறுகதையில் ஒன்றுதான் உண்டு. நாவல்
நட்சத்திரங்கள் நிறைந்த வானம் போன்றது அந்த நட்சத்திரங்கள் எப்படி வானிலே
நிற்கின்றன? அதுபோலத்தான் நாவலிலே எல்லா விஷயங்களும் இருக்கின்றன அற்புதமான
நாவலாசிரியனின் கலையால் மெருகுபெற்று. வார்த்தை, ஓசை முதலியவற்றிற்கும் அப்பால்
கவிதைக்கு ஓர் ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மா தான் கவிதையிலே முக்கியமான அம்சம்."
க.நா.சுப்ரமண்யம். வெளியீடு : ஆதி பதிப்பகம்
Comments