என் ஆடை என்பது யாருடைய குருதி?
பஞ்சாலை சத்தங்களுக்கு இடையே வளர்ந்தது தான் என் பால்யம். இன்னும் சொல்லப்போனால்
அந்தச் சத்தங்களின் விளைச்சலில் அறுவடையானது தான் என் பள்ளிப் படிப்பும் பட்டயக்
கல்லூரிப் படிப்பும். அதே நேரத்தில் மில்லு வேலைக்கு என் அண்ணன்களையும்
நண்பர்களையும் தம்பிகளையும், தெக்கால டைமண்ட் ஃபேக்டரிக்கும் வடக்கால பிராந்தி
கம்பெனிக்கும் அக்காக்களையும் தோழிகளையும் தங்கைகளையும் உற்பத்தி செய்து கொடுத்துக்
கொண்டிருந்தது நடுவே இருந்த நான் படித்த நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு
உயர்நிலைப்பள்ளி. கல்வியும் ஆசிரியர்களும் எவ்வளவு முயன்றாலும் அவர்களால்
குடும்பங்களின் வறுமையோடு அப்பொழுது போட்டியிட்டு வெல்ல முடியவில்லை. இன்று நிலைமை
மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை. மில் வேலை முடித்து வருபவர்களின்
தலையிலும் உடலிலும் ஒட்டி வரும் பஞ்சு மட்டுமே அன்றாடப் பிரச்சினையாகவும், தீபாவளி
நேரங்களில் கொண்டாட்டங்களை முழுமையாக அல்லது அனுபவிக்கவே முடியாத போனஸும்
ஸ்ட்ரைக்கும் அடுத்தப் பிரச்சனையாகவும் உருவகித்திருந்தது அந்தப் பருவம். காலம்
கனிய கனிய நூற்பாலைகளின் சிக்கல்கள் புலப்படத் தொடங்கின. பத்தாவது வரை படிக்க
வைப்பதே தான் வேலை பார்க்கும் மில்லில் தம் பிள்ளைகளை சூப்பர்வைசராகவோ ரைட்டராகவோ
ஆக்கி அழகு பார்க்கும் அடிமைத்தனத்தைப் பஞ்சாலைகள் பெற்றோருக்கு எப்படியோ கற்றுக்
கொடுத்திருந்தன. யார் கண்களிலும் புலப்படாது பஞ்சாலைகளுக்குள் எரிந்து கொண்டிருந்த
அவலமான தீ அது. தென்னிந்திய நூற்பாலைகளில் பெருமளவில் உள்ள கட்டாய (குழந்தைத்)
தொழிலாளர்கள் பற்றிய ஆய்வு அறிக்கை " என் ஆடை என்பது யாருடைய குருதி? ". ஒட்டுமொத்த
உலக உற்பத்தியில் 35 முதல் 40 சதவீதம் வரை பருத்திநூல் உற்பத்தி நடக்கும்
தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட ஆய்வு அது. கட்டாய உழைப்பு, அதிகார திமிர்,மோசடி, உடல்
மற்றும் பாலியல் வன்முறை, மிரட்டல்கள்,ஊதியத்தை நிறுத்துதல், தவறான வேலை முறைகள்,
அதிகப்படியான வேலை நேரம் போன்றவற்றைப் புள்ளி விவரங்களோடு தொட்டுச் செல்கிறது நூல்.
விடுதியில் தங்க வைக்கப்படும் முறை தற்போது அதிகரித்துள்ளதால் விடுதிக்
கட்டுப்பாடுகளும் வேலையில்லாத நேரங்களில் நடமாடும் சுதந்திரம் கூட இல்லாது
இருக்கும் நிலை இந்த நூலின் மூலம் கிடைத்த புதிய தகவல். சுமங்கலி திட்டம் முதல்
இ.எஸ்.ஐ மற்றும் இ.பி.எப் போன்ற திட்டங்களில் உள்ள நடைமுறை சிக்கல்கள் நூலில்
பேசப்படுகின்றன. ஆய்வறிக்கையாக மட்டுமே மாற இருந்த இந்த நூலைத் "தறிச்சத்தம்" என்ற
முன்னுரையாலும், ஆய்வு முடிவுரைக்குப் பிறகு உள்ள குறிப்புகளாலும் வேறொரு
இடத்திற்கு நகர்த்தி இருக்கிறார் நூலாசிரியர் சிவகுருநாதன். அந்தப் பக்கங்களில்
பொருளாதார உயர்வு வாழ்வின் எல்லை இல்லை என்று கருதும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
எளிமையில் நிறைவு காணும் செல்வந்தர்கள் இருக்கிறார்கள். தொழிலைக் கலையாக நேசிக்கும்
பெரியவர்கள் இருக்கிறார்கள். அந்தக் கலையை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும்
தேரோட்டிகள் இருக்கிறார்கள். அவர்களோடு ஒருவராக நூற்பு கைத்தறி நெசவுப்பள்ளி
நடத்தும் இந்த நூலின் ஆசிரியர் சிவகுருநாதனும் இருக்கிறார். பதிப்பகம் : தன்னறம்
நூல்வெளி
Comments