எல்லா உயிரும் பசி தீர்க்க

தன்னறம் பதிப்பகத்தின் மற்றுமொரு நல்ல படைப்பு. ஈரோடு புத்தகத்திருவிழாவில் ஐயா நம்மாழ்வார் பேசிய நீள் உரையின் எழுத்து வடிவம். சரஸ்வதி ராதாகிருஷ்ணன் அவர்களின் எழுத்தாக்கத்தில் வந்துள்ளது. வழக்கம்போலத் தன்னறத்தின் சமூகக் காதலும் அதோடு கூடிய அக்கறையும் புத்தக வடிவமைப்பில் தெரிகின்றது. எடுவர்டோ கலியானோவில் தொடங்கி வண்ணதாசன் கவிதையில் நிறைவாகிறது புத்தகம். பசியால் சுழல்கிறது உலகம். பசியால் நடந்துகொண்டிருக்கிறது உயிர்களின் சுழற்சி. உடல் பசி தொடங்கி உள்ளப் பசி வரை உயிர் நரம்புகளைக் கைகளில் இறுக்கி பிடித்திருக்கிறது பசி என்னும் சாத்தான்; பசி என்னும் தெய்வம். பசி என்றவுடன் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் கவிதை ஒன்று நினைவுக்கு வரும். “ஆனால் பசியை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்னிடம் ஒரு பசிதான் உள்ளது மறுபுறம் இன்னமும் பல நூறு ஆண்டுகளுக்கான உணவு உள்ளது அதைக் கொண்டு ஆயிரம் பசிகளைப் பணியில் அமர்த்துவேன் பல நூறு உணவின் பெயர் சொல்லி பல்லாயிரம் பசியைப் பெருக்குவேன் ஒரு பசியைக் கொண்டு இன்னொரு பசியை அடக்குவேன் எதிர்த்து வரும் பசிகளுக்கு ரொட்டித் துண்டுகள் வீசுவேன் வாலாட்டும் பசிகளுக்கு எலும்புத் துண்டுகள் பசிதான் இவ்வுலகின் எஜமானன் அதைக் கண்டுபிடிப்பவனை கொலை செய்பவன் வெற்றியாளன் பசியைப் புரிந்தவன் வாழ்வைப் புரிந்தவன் பசியை எழுதுகிறவன் அபாயமானவன் பசி போல் அவனும் இவ்வுலகில் அழிவதில்லை. ” என்று எழுதியிருப்பார். இந்தக் கவிதையில் பசி என்ற சொல்லை எடுத்துவிட்டு வேறு எந்த உணர்வையும் இட்டுக்கொள்ளலாம். அன்பு, காதல், காமம், கோவம் என எதை வேண்டுமானாலும். ஆனால் எந்தச் சொல்லைப் போட்டாலும் எந்த உணர்வை இட்டாலும், பசி ஒன்றே இந்தக் கவிதையின் ரத்தமாக ஓடும். சுதந்திர இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகான மக்கள் தொகை 30 கோடி. இன்று 75 ஆண்டுகளால் அடைந்த பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு, தொழில்நுட்ப வெளிச்சத்துக்குப் பிறகு, பசுமைப்புரட்சிக்குப் பிறகு, தனிமனித வருமான உயர்வுக்குப் பிறகு, வல்லரசை எட்டிப் பிடிக்கும் உயரம் வந்த பிறகு, தினமும் இந்தியாவில் பசியோடு தூங்கச் செல்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 32 கோடி. இந்தப் புள்ளிதான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம். ஐயா நம்மாழ்வார் உரங்களைப் பற்றிப் பேசுகிறார். பூச்சிகளைப் பற்றிப் பேசுகிறார். சாதியைப் பேசுகிறார். அதிகாரத்தைப் பேசுகிறார். மண்ணைப் பேசுகிறார். மண்புழுவைப் பேசுகிறார், சுழற்சியைப் பேசுகிறார் இப்படிப் புத்தகமெங்கும் பேசிக்கொண்டு இருக்கிறார். நாமும் படித்துக் கொண்டே இருக்கிறோம். இருப்போம். ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் நமது ஊரில் நமது தெருவில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. தீர்வுகளை யோசிக்க முடிவதில்லை. யாரேனும் யோசித்துச் சொன்ன தீர்வுகளைச் செயலாக்கம் கொடுக்க முடிவதில்லை. எல்லாம் தாண்டி தனிமனிதச் சிக்கல்கள், உறவுப் பிறழ்கள், உள்ளப் பிசகுகள் ஓங்காரமாய்க் கொழுந்து விட்டு எரிகின்றன. சிறிய அறைக்குள் ஒளிந்துகொண்டு நாம் கையில் பிடித்திருப்பது பெரும் மிருகத்தின் கொடிய வால். “எல்லாக் குழந்தையின் அழுகைக்கும் மார்பு சுரக்கும் சாதாரணள் நான்” என்று கவிஞர் பவித்ரா பாண்டியராஜ் எழுதியிருப்பார்.. போலவே இங்கு என்ன நடந்தாலும் எல்லா உயிர்களுக்கும் மடி சுரக்கிறது பூமி. நமக்குத்தான் இங்கு வாலைப் பிடித்து வைத்திருக்கும் வேலை இருக்கிறது.

Comments