யாமக்கோடங்கி விமர்சனம் - Chithrarajam Meenakshi Sundaram
பிடித்த தின்பண்டத்தை வைத்துத் தின்பது போல வைதேகி Vaideki Thayumanavan பரிசளித்த ,கவிஞரின் கையெழுத்திட்ட இந்தக் கோடங்கியின் குடுகுடுப்பை ஒலியை அவ்வப்போது கேட்டு ரசித்து விட்டு வைத்துவிடுவேன். ஏதேனும் கவிதை நூல் முழுமையாக வாசிக்க வேண்டும் என யோசித்தபோது முதலில்கண் முன் விரிந்தது யாமக்கோடங்கி .
முதல் கவிதையிலேயே மலேசியா வாசுதேவனின் ஏகாந்த குரல்
கசியும் நெடுஞ்சாலை யாமப் பயணமொன்றில்,
சன்னல் வழி
கவியும் மஞ்சள் ஒளி தடை செய்த இளங்குடிகாரர் நிகழ்த்த விரும்பும் இருளுக்கும்
மதுவுக்குமான சந்திப்பை
காலியாய் இருக்கும் பக்கத்து இருக்கையில் இருந்து நாமும் பார்க்கிறோம்.
சிவகங்கையில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் கவிஞர்
மதிக்குமார் தாயுமானவனுக்கு இது முதல் கவிதைத் தொகுப்பு என்பதை முதல் கவிதையை வாசித்த பிறகு நம்பவே முடியவில்லை.அந்த அவநம்பிக்கை தொடர்கதை ஆகியது.
முறையீடு.
வேண்டுதலின் முடிவில்
நீங்கள் அடித்த
கோவில் மணிக்குள்
அப்பொழுதுதான்
உச்சத்தை எட்ட இருந்தது
பல்லிகளின்
காம விளையாட்டு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பல்லிகளின் மேல் கருணை
கொள்கிறார் கவிஞர் எனவும் கொள்ளலாம். அதே நேரத்தில் ஒரு பிரார்த்தனையின் நிறைவேறல்
இன்னொன்றின் மீது சிலுவை சுமத்துவதாகலாம் என ஆழமான பொருள்கோளையும் அவதானிக்கலாம்.
இதே தொனியில் அமைந்த பழைய கேள்வி என்ற கவிதையும் சரி ,தவறு என்ற இருண்மையின் இடையில் உள்ள மெல்லிய நூலிழையை
அறுக்கத் தலைபடுகிறது.
அதே வரியில் தொடங்கி அதே வரியில் முடிகின்ற கவிதைகள் சில.
அவற்றின் நடுவில் இருக்கின்ற சொற்களின் ஆழமும் கனமும் நம்மை அமிழச் செய்பவை.
இருத்தலுக்கும் இன்மைக்கும ,பகலுக்கும்
இரவுக்குமான இடைவெளி என (duality )இருண்மை பேசும் கவிதைகள். ஒவ்வொரு பக்கமும் வலியாய், ஏக்கமாய், காதலாய், நீதியாய், கேள்வியாய் கடந்து போக முடியாமல் செய்கின்றன.
கலைந்து வெளியேறும் சின்னஞ்சிறு சிசுவைக்
கண்களில் ஏந்தி கொண்ட தகப்பனுக்கு உடனடியாக தேவைப்படுகிறது
யானையின் நிழலுக்குள் பாகன் படுத்துறங்கும் குளிர்ச்சி
.இந்தக் கவிதை நம்மையும்
கொதி நிலைக்குள் தள்ளுகிறது.
பழைய கேள்வி
ஒரு ஊர்ல
ஒரு ராஜாவோட
தேர்ச்சக்கரத்துல மாட்டிக்கிட்ட
கன்னுக்குட்டிக்காகவும்
அண்ணனுக்காகவும்
மாறின முகத்தோடு மகள்
கேட்டாள்
அண்ணனோட அம்மா எங்கப்பா
சின்ன அறைக்குள் தானாய் அசைந்து கொள்கிறது ஆராய்ச்சிமணி
இந்த கவிதையில் பொதிந்துள்ள கேள்விகள் தான் எத்துணை? எதுவும் எழுதப்படாத குழந்தை மனம் கேட்கும் கேள்வி ஞான
வேள்வி.ஒருவருக்கான நியாயம் பிறிதொருவருக்கான அநியாயம். தர்மம் தழைத்திருக்கலாம்.
ஆனால் அறம் எங்கே?அடிக்கப்படாத
ஆராய்ச்சி மணி காலம் கடந்து கவிஞரின் கவிதையில் இசைவில் குழந்தையின் குரலால்
தானாய் அடிக்கிறது.
வாழ்வின் நிதர்சனங்களையும் போராட்டங்களையும் யாமத்தின்
ரம்யத்தையும் ,
யாருமற்ற தனிமையையும், கரை இல்லாத
அன்பையும், பிரிவின் வேதனையையும் கிழித்து குடுகுடுப்பை ஒலிக்கிறது.
காத்திருப்பின் நகர்வு ,குலசாமி, உற்சவம், நெடுநல்வாடை
ஆகிய கவிதைகளில் இருக்கும் காட்சிப்படுத்துதல் நம்மை ஒரு மௌன வெளிக்கு அழைத்துச்
செல்கிறது.பகடியாய் சில கவிதைகள், பாசமாய் சில
வெப்பச் சலன மழை போல.
பாவ மன்னிப்பு
கோவிலுக்குள்
அனுமதி மறுக்கப்பட்டவனின்
காலில் வந்து விழுகிறது
கோபுர நிழல்
காலங்காலமாய் தொடரும்
நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான மீட்சி இக்கவிதை.
தெய்வம் தானாக கீழிறங்கி, மன்னிப்பு
கேட்கிறது.
அவனை விலக்கிய மதத்தின் இருட்டு
அவனை அணைக்கும் பேரொளியால்
விலகிய தருணத்தை ஒரே வரியில் சொன்னது அற்புதம்.
அமர் நீதி
வேறு வழியில்லை
இலகுவானவற்றை எடையிட்டுத் தான்
பார்க்க வேண்டும்
நான் பேசாத காரணங்களை
உன் தட்டிலும்
நீ பேசாத
நியாயங்களை
என் தட்டிலும்
மாற்றி மாற்றி ஏற்றி வைத்தோம்
சங்கிலிகள் இறுகின
பின்
நானாய்ப் பேசிய தருணங்களில்
தணிந்திருந்த வெப்பத்தை உன் பக்கம் தள்ளினேன் பதிலுக்கு
நீயும் உன்னுடைய தூறல்களை என் பக்கம் கூட்டினாய்.
முள் இப்பொழுதும் நகரவில்லை
இறுதியாய்த் தனித்தனியே அக்குவியல்களில் ஏறிக்கொண்டோம்
அன்பின் மலைகள் நம்மைச் சுமந்து கொண்டிருக்கின்றன
தான் என்னும் அரவங்கள் தலை மேல் ஆடிக் கொண்டிருக்கின்றன.
இந்த கவிதையின் கனல்களும், கணங்களும், கனங்களும், கடக்காத எந்த உறவுமே இருக்க முடியாது.
அன்பு "தான் "என்னும் அகத்தால் ஆட்டம் காண்பதை, விட்டுக் கொடுத்தலின் பாதை ஒளி யில்லாவிட்டால் வாதை தான்
என்பதை அழகாய்ச் சொல்லும் கவிதை இது.
இந்த கவிதை நான் மூன்று வருடங்களுக்கு முன் கிறுக்கிய என்
இந்தக் கவிதையை நினைவூட்டியது
Ego's flame and
Pride's cruel sting
Shatter the harmony of a
love's delicate wing
If only she misses me,she
will call me he thought
She thought the same
THE END.
தெய்வத்தின் சலுகை
சவுக்கையிலே ஏறித்
தொலைக்கிறது பத்தாதுன்னு
பட்டத்து கண்மாயில
தூரத்தோடவுல இறங்குதுக
மகளிர் குழு சீட்டை
மண்டகப்படியில் நடத்தறதும்,
நைட்டியோட புள்ளையாரச் சுத்தறதும்
எந்த சாமிக்கு அடுக்குமோ இம்புட்டுச் சாமி குத்தம்
நெரம்பின ஊர்ல
வந்த உத்திரத் திருவிழாவுக்குக் கொட்டகைய பிரிக்கையில
தேருக்கடியில
கிடந்துச்சு
அம்புட்டுப்
பிராந்தி போத்தலுக.
தெய்வச் சலுகை ஆண்களுக்கு தெய்வக் குத்தம் பெண்களுக்கு
வீடு திரும்புதல்
நீரிழிவு நோயால் அவதிப்படும்
அம்மாவால்
எளிதாக
சிறுநீரை அடக்க முடிவதில்லை
சேலையில் கொஞ்சமும்
தரையில் கொஞ்சமும் வழிந்தது போக
எஞ்சியதுதான் கழிவறைக்குள் செல்கிறது
மற்றவர்கள் பார்க்கும் முன் அதி முக்கியமாக அம்மாவே
கழிவறையிலிருந்து திரும்புவதற்குள்
வேகவேகமாக
துடைக்க வேண்டிய
அத்துளி நேரத்திலும் மெழுகுத் துணி
வரைந்து விடுகிறது
அரை வட்டத்தில்
முன்னம் இருந்த பனிக் குடத்தை
இக்கவிதை என்னுள் ஏதோ ஒன்றை உடைத்து கண் உடைப்பெடுத்தது.ஒரு
கவிதைக்குள் இத்துணை பொதித்து வைக்க முடியுமா.?வயோதிகத்தின்
வாசலில் நிற்கும் அன்னையை கூசச் செய்யாமல் வினை முடிக்கும் துளி நேரத்தில் துணி
வரையும் பனிக்குடத்தை நாமும் வரைகிறோம்.
அன்பின் சுரத்தல் என்னும் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது
அண்ணாந்து அண்ணாந்து
பார்த்து மார்பு காம்புகளை தேடுகின்றது.
தாய் புரட்டும்
அலுவலகக் கோப்புகளில்
ஒரு பாலை விரிகின்றது.
இதை வாசித்த
நம் மனமும் பாலையாகிறது.
கூடுதலாய் முளைத்த தனங்களோடு வேலை முடித்து அவசரமாய்
திரும்புகிறாள் அம்மா இதழ்களாக உருமாறி இரவு முழுதும் அவளை இறுகப் பற்றி கொள்கிறது
வீடு
எனும் போது ஒரே நேரத்தில் ஆசுவாசமாயும் அலைக்கழிப்பாகவும்
இருக்கிறது.
காலப்பிழை ,தாயுமானவன், வடிவியலின் தந்தை எல்லாமே தந்தைக்கும் செல்ல மகளுக்குமான
புன்னகை வரவழைக்கும் வெப்பச்சலன மழை.
ஒரு பனையில் இருந்து இன்னொரு பனைக்கு இயல்பாய் நகர்கிறது
நிலவு
நிலவை பிரியும் பனையின்
கண்ணீர் கீழே விழுவதில்லை.
சேரும் பனையின் துள்ளல்
பார்வையில் படுவதில்லை.
நிலவின் மனநிலை
யூகிக்க முடியவில்லை.
சாய்ந்து கொள்ள
சின்ன வானமும்
புதைந்து அழக்
கொஞ்சம் மேகமும்
தேவையாய் இருக்கிறது எனக்கு
எல்லோருமே இந்த ஆறுதலின் கரங்களைப் பற்றத்தானே
நினைக்கிறோம்.
தாபத்தில் இடப்பட்ட கொள்ளி கவிதை
பெண்ணின் நிறைவுறாக காமக் கிடக்கையின் வலி கடத்துகிறது
பேசாப் பொருளைப் பேசி, காணாப் பொருளைக் காட்டி சொல்லற்றவர்களின் சொல்லாக மிளிர்கின்றன கவிதைகள்.
தோலுரிக்கும் பகல்
தூக்கமற்ற இரவில்
இருபத்தொரு பந்தி
அறுபத்தொரு சேனை
தெய்வங்களையும்
வீட்டு வாசலில் நிறுத்தி
நம்பிக்கையைப்
பிச்சையிட்டுச் செல்பவர்
மறுபகலில் தனியே
வந்து நிற்கிறார்.
சில்லறைக் காசும்
கொஞ்சம் அரிசியும்
எடுத்து வெளியே வருகிறது
ஒரு தெய்வம்
"படியை விட்டு
இறங்கிக்
கை படாம போட்டு
அனுப்புங்க " என்கிறது
உள்ளிருந்து ஓர் அசரீரி.
முன்னிரவை விடக்
கழுத்தை முறித்து முறித்துப்
பிளிறுகிறது
குடுகுடுப்பை
மனித முரண்களைத் தோலுரிக்கும் கவிதை.இரவில் தெய்வமானவன்
பகலில் பிச்சைக்காரனாகவும் இரவில் நிம்மதியை யாசித்தவன் பகலில்
தெய்வமாகிறான்.அந்தக் கருணையின் முகமூடிக்குள் உள்ளே தீண்டாமையின் பேயாட்டம் ,
இரவின் நம்பிக்கையாய் ஒலித்த குடுகுடுப்பையை பகலில் பிளிறச்
செய்கிறது.
காலத்தை இசைத்தல் கவிதை ஒரு விபத்தை இவ்வளவு அழகாக சொல்ல
முடியுமா என மயங்க வைத்தது.
பாதி ஜீவன் கொண்டு
தேகம் வாழ்ந்து வந்ததோ... ஹ்ஹா
அந்த "ஹ்ஹா" ,வின் வழ
வழப்பில்
நெடுஞ்சாலையை கடந்து இருக்கக் கூடாது தான்
எனத் தொடங்கி
தூக்கி எறியப்படும் பொழுது
காற்றில் செல்லும் காற்றாக
மரங்களைக் கடந்து
அடுக்குமாடிகளைக் கடந்து
அன்பில்லாமைகளைக் கடந்து
என வரும் வலி கடத்தும் வரிகளை என்ன சொல்ல !
தூக்கி எறியப்படும், கீழே விழும்
மரணத்தின் தாலாட்டிசைக்கும் நொடிகள் முழுமைக்கும் மலரே மௌனமா பாடல் வரிவரியாய்
பொருந்தி போவது கவிஞரின் பேனா வித்தை.
சாலையின் இருமருங்கிலும் பூக்களின் மடி
எத்தனை காலம் தான் பூக்களை கிள்ளி பிணங்களில் தூவுவது
புது வாழ்க்கை தந்த வள்ளலே
இப்படித்தான் முடிகிறது பாடல்
அந்தப் பாடலை அப்படித்தானே முடிக்க முடியும்
என்ற வரிகளின் ஆழம் இனி மலரே மெளனமா பாடல்
கேட்கும் போதெல்லாம் காலத்தை இசைத்தல் தானே நினைவிருக்கும்.
இந்த கற்பனையின் அழகியலை என்னால் கடக்கவே முடியவில்லை
இப்படித்தானே முடிக்க முடியும் என் வரிகளையும்.!
பார்க்க சாதாரணமாகத் தோன்றும் சொற்கள் சரியான இடத்தில்
கவிஞருக்கு வந்து விழுந்து கவிதைகளை வேறு உயரத்திற்கு எழச்செய்கின்றன.
பெண்பித்து கவிதை வாசித்தவுடன் சில சமயம் கையறு நிலையில்
நான் கடந்து செல்லும் மனநிலை சரியில்லாத பெண்கள் என் கண் முன் வந்து கண்
நிறைத்தார்கள்.அவள் பிரசவ தழும்புகளை எண்ணத் துவங்கும் நொடியில் வாசிப்பவர்களுக்கு
வலிக்கிறது .
பூப்பெய்தலின் துயரம் கவிதையில்
காளிக்கு காளி யாய் இருக்க பிடிப்பதில்லை என்ற வரிகளில்
ஆரம்பித்து அதே வரிகளில்
முடியும்
கவிதைக்குள்
காளியையே வதம் செய்த தாருக ,ரக்த
பீஜர்களின் கோர முகம் நர்த்தனமாடுகிறது. காளிக்கு காளியாய் இருக்கப் பிடித்திருக்க
கூடாதா என நம்மை ஏங்க வைக்கிறது.
விளிம்பு நிலை மனிதர்களுக்கான சமூக நீதியாய் ,உடலைக் கடக்க முடியாமல் காமத்தில் அலைவுறும் மனிதர்களுக்கு ஆறுதலாய், குழந்தைகளின் குரலாய்,துயரக்கடலுக்கு
நாவாயாய் பலருக்கும் பலவாய் குடுகுடுப்பை ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
Comments