கதாநாயகி

கதாநாயகி

சிறுகதைகளை, நாவல்களை அல்லது அவற்றில் வரும் பாத்திரங்களை வேறொரு கலைப் படைப்பாக உருமாற்றம் செய்யும்போது ஏற்படும் அனுகூலங்களும் சிக்கல்களும் அனைவரும் அறிந்ததே ஆனால் மேற்கண்ட படைப்புகள் / கதாபாத்திரங்கள்  இன்னொரு சிறுகதைக்குள்ளோ நாவலுக்குள்ளோ  உயிர்த்தெழும்போது கிடைக்கும் வாசிப்பின் கூர்மை அலாதியானது, அனுபவிக்க வேண்டியது. அதே சமயம் எந்தச் சிக்கலும் இல்லாமல் அந்த அனுபவத்தைத் தர படைப்பாளி கூடுதல் உழைப்பைத் தந்து கூடுதல் வாசக மனநிலையை அடைய வேண்டும். அந்தப் பிரயத்தனங்களை வெளிக்காட்டும் படைப்பு ஜெமோவின்  'கதாநாயகி'. அடர்ந்த காடு நிறைந்த மலைப்பகுதியில் தொடங்குகிறது நாவல். அங்கு ஆசிரியப் பணிக்கு செல்லும் நாயகன் படிப்பதற்காக இன்னொரு நாவல் ஒளிந்திருக்கிறது.  நாவலை வாசிக்க ஆரம்பித்ததும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் உயிர்த்தெழ ஆரம்பிக்கின்றன. காட்டுப் பங்களாவுக்குள் தனியறைக்குள் இருப்பவனிடம் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த பெண்கள் பேச ஆரம்பிக்கின்றனர். பழங்குடி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அவனோடு இன்னொரு நாவலின் ஆசிரியரான ஃபேன்னி பர்னி,அந்நாவலின் கதை நாயகியான ஈவ்லினா, கதைக்குள் பேசப்படும் இன்னொரு      தொல்கதாபாத்திரமான விர்ஜினியா, அக்கதைகளை வாசிக்கும் ஹெலோனா என நான்கு பெண்கள் வாழத் தொடங்குகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் வேறு வேறு கதை; வேறு வேறு சூழல்;வேறு வேறு உணர்ச்சிகள் ;வேறு வேறு நீதி கிட்டத்தட்ட அவன் மனநிலை மோசமடையும் நிலைக்கு நிகழ்வுகள் நடக்கின்றன. சமயத்தில் வாசிப்பவருக்கும் ஏற்படும் சில குழப்பங்கள் மீள் வாசிப்பை கோருகின்றன. இருந்தும் ஜெமோவின் எழுத்தில் அடிக்கடி வரும் தெறிப்புகள் தொய்வில்லாமல் பக்கங்களை நகர்த்துகின்றன.

உதாரணத்திற்கு பொதுவாக சிற்றூரில் வசிக்கும் பெண்கள் எதுவும் தெரியாதவர்கள், கள்ளம் கபடமற்றவர்கள் என்ற பொது புத்தி இருக்கிறது. ஆனால் ஜெமோ ஓரிடத்தில் " இந்த ஊரின் எளிமையான பெண்ணைக் கடவுள் எடுத்துக் கொண்டு சென்று அவள் உள்ளத்தை வெட்டி ஆராய்ந்தார் என்றால் அங்கே ஆயிரம் சாத்தான்களும் பல்லாயிரம் பேய்களும் நடனமாடிக் கொண்டிருப்பதைக் காண்பார். லண்டன் நகரையே மூடிவிடும் அளவுக்கு சாக்கடைப் பெருக்கு ஒன்றைக் கற்பனை செய்யுங்கள். அதுதான் இங்குள்ள ஒரு பெண்ணின் உள்ளம். ஏனென்றால் அது பாவத்தை உடலால் செய்ய வாய்ப்பே அமையாத துரதிர்ஷ்டம் கொண்டது." என்பார்

மின்சாரத்தில் பூத்த பூ அவ்வளவு வெளிச்சம் தருகிறது என்று விளக்குகளையும் ன, மழை வரும் போது நீரில் நீர் விழுந்து தெளிப்பது நீராலான சிறிய நாற்றுகள் என்பதும், வன்மம் கொண்ட பார்வையைச் சொல்லும் போது கண்களில் ஒரு கண்ணாடி துண்டை திருப்பியது போல என்பதும்,பழங்குடி ஒருவன் எழுத்துக்களுக்கு பயன்படுத்தும் உருவங்களையும் கடக்கும்போது மெலிதாக ஒரு புன்னகை பற்றிக் கொள்கிறது.

மற்றபடி இந்த நாவலில் இருந்து என்ன எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கையில் அதையும் ஜெமோவே நாவலின் மையத்தில் சொல்லி விடுகிறார்.
"எஞ்சவிட்டுச் செல்வதில் மிகச்சிறந்தது கதைதான். அது அழியாமல் நீடிக்கும்.  கதையாக மாறிய முத்துப்பட்டனும் மாயாண்டிச் சாமியும் இன்றும் கோவிலில் அமர்ந்திருக்கிறார்கள்.  கதையை எழுதி வைத்தால் என்றும் இருக்கலாம்.ஷேக்ஸ்பியர் அழியவில்லை. அவரால் எழுதப்பட்டவர்களும் அழியவில்லை. காரியம் ஒரியும் அழியவில்லை. கபிலரும் பரணரும் வாழ்கிறார்கள். கதைகள் எல்லாம் நினைவுச் சின்னங்கள். எல்லா நூல்களும் கல்லறைகள் தான். அவற்றில் இறந்தவர்கள் அடக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒருவர் மேல் ஒருவர் என. ஒருவருடன் ஒருவர் பிணைந்து அடுக்கடுக்காக. அவர்கள் ஒரு தொடுகைக்காக காத்திருக்கிறார்கள். கண்விழித்து புன்னகைக்கிறார்கள். நீண்ட நாள் காத்திருப்பு போல பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் நம்மை எடுத்துக் கொள்கிறார்கள். நம் உலகை ஆக்கிரமித்து தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் அவர்களுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களைத் தொட்டு எழுப்பி விட்டோம் என்றால் நாம் நம் உலகை எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்ற பொருள்.".

வேறென்ன எடுத்துக்கொள்வது.

சின்னத் தொடுதல் ...கொஞ்சம் ஆழ்ந்த தொடுதல்...







Comments