அன்புள்ள புல்புல்
கிராமங்களில் அவ்வப்போது கொடியேற்றவும் கட்டிடங்கள்
திறக்கவும் பயன்பட்டுக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் இன்றைக்கு
அருகி வரும் உயிரினம் போல மறைந்து கொண்டிருக்கின்றனர் அல்லது சில கிராமங்களில்
இல்லாமலே ஆகிவிட்டனர். போராட்டக் களங்களில் காங்கிரஸுக்காகச் செல்வந்தர்களால்
உபயம் செய்யப்பட்ட கட்டிடங்கள் குண்டு பல்பு மாற்றக் கூட ஆளில்லாமல் ஒளிந்து
கொண்டிருக்கின்றன. கதர் சட்டை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கான அறிவிக்கப்படாத
சீருடையாக மாறி உள்ளது. இந்தச் சூழலில் சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில்
ஒருவேளை இன்று வரை காந்தி இருந்திருந்தால் அவர் என்ன செய்து கொண்டிருப்பார் அல்லது
காந்தியை வைத்து நாம் என்ன செய்து கொண்டிருப்போம் என்ற கற்பனை வந்து
கொண்டிருக்கிறது.
மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்திய நிலப்பரப்பை
நிலத்திற்குக் கீழாகவும் கடலுக்கு மேலாகவும் இருந்து தாங்கிக் கொண்டிருப்பது இன்றைக்கும் காந்தியக் கோட்பாடுகளே
என்று முழுமையாக நம்பினாலும் காந்தி என்ற தனி மனிதனின் செயல்பாடுகள் இன்று எப்படி
இருந்திருக்கும்? தாயகப்
போராட்டம் முதல் உக்ரைன் போர் வரை காந்தி எப்படிக் கையாண்டிருப்பார்?. ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக எந்த ஊர்களுக்கிடையே
நடையாய் நடந்து கொண்டிருப்பார்? திருப்பரங்குன்றம்
கோவில் வாசல் முன்னே காந்தியும் அருள்மிகு தெய்வானை சமேத சுப்பிரமணியரும் எவ்வளவு
நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருப்பர் என்றெல்லாம் தோன்றுகிறது. எழுத்தாளர்
சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள “அன்புள்ள புல்புல்” படித்தவுடன் காந்தியை அருகில் அமர்த்தி
அவரது அன்றாடங்களுடன் அளவளாகவே தோன்றுகிறது.
“காந்தி இன்று” (www.gandhitoday.in) வலைதளத்திலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பதினெட்டு கட்டுரைகளின் தொகுப்பு இந்த
நூல்.
காந்தியை “மகாத்மா” என்ற புனிதக் கோட்டுக்குள் அடைக்காமல்
“காந்தி சாதாரண மனிதர் தான். ஆனால் நம்மைவிட மேம்பட்ட மனிதர் ” என்ற போர்வையைப்
போர்த்துகிறார் நூலாசிரியர். காந்தி என்ற தனிமனிதனையும் , காந்தி முன்னிறுத்திய கோட்பாடுகளையும் காந்தியத்தின் பக்கம்
நின்று பேசுகிறார். அதே நேரம் நவீன வாழ்க்கைக்குள் அகப்பட்டு இன்னொரு சாதாரணன் ஒவ்வொரு செயலிலும் நிகழ்விலும் காந்தியத்தோடு
விவாதித்து, சில நேரங்களில் உடன்பட்டும்
சில நேரங்களில் மீறியும் மறுதலிக்கும் நூலாசிரியரின் யதார்த்த மனநிலை புரிகிறது.
சுனில் கிருஷ்ணன் கட்டுரைகளில் சாதாரணமாகச் சென்று
கொண்டிருக்கும் இடங்களில், சட்டென்று
வலிமையான சொல்லோ சொற்றொடரோ வந்து விழும். வினோபா பாவே பற்றிய வேறொரு நூலில் உள்ள
கட்டுரையில் “இயற்கையைத தாம் ஆதிக்கம் செய்கிறோம் என்று எண்ணும் பொழுதெல்லாம்
மனிதன் இயற்கையின் கண்களுக்கு ஆகச்சிறந்த கோமாளியாகத் தென்படுகின்றான்” என்று
எழுதி இருப்பார். அதைப்போலவே இந்த நூலிலும் நிறைய இடங்களில் வார்த்தைகளில் வன்மை
தெரிகிறது.
“உண்மையான அதிகாரம்
ஆயுதங்களில் இல்லை. மக்களின் மனங்களில் அது உள்ளது. அரசு மக்கள் மீது செலுத்தும்
அதிகாரம் என்பது யானையின் காலில் கட்டப்படும் சங்கிலியைப் போலத்தான். அறியாமையின்
காரணமாகவோ அல்லது விருப்பத்தின் பேரிலோதான் அது சங்கிலிக்குக் கட்டுப்பட்டு நடக்கிறது
என்பதை அரசாங்கங்கள் ஒருநாளும் மறக்கக் கூடாது.” என்பதை “அகிம்சையின் வெற்றி” என்ற
ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார்.
காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டாங்களின் முன்னோடியாகப் பல
அகிம்சை வழியிலான போராட்டங்கள் இந்திய மண்ணில் 1800 களிலேயே
நடந்திருந்தன என்பது புதிய தகவல். அந்தப் போராட்டங்கள் குறித்தான கட்டுரையும்
இந்நூலில் உள்ளது.
காந்தி குறித்தான் கட்டுரைகள், நூல்கள் பற்றிய கட்டுரைகளும் நூலை நிறைத்துள்ளன. அந்தக்
கட்டுரைகளின் வழியாக படிக்கத்தூண்டிய ஒரு நூல் மில்லி எழுதிய நினைவுக் குறிப்பீடு.
பாரதிக்கு யதுகிரி அம்மாள் போல காந்திக்கு மில்லி. காந்தியை மிக அணுக்கமாக அணுகி
அவரின் “கிறுக்குத்தனங்களையும்” ஒரு சாமான்யனின் பார்வையில் மில்லி வைத்துள்ளதாக
அறிய முடிகிறது.
“காந்தியும் பகத்சிங்கும்”
மற்றும் “காந்தியும் 55 கோடியும்” என்ற
இரண்டு கட்டுரைகள் இந்த நூலில் மிக முக்கியமான கட்டுரைகள். காந்தியும் 55 கோடியும் கட்டுரையில், சுனிலும் , அந்தப் பிரச்சினையின் தார்மீகமும் காந்தியின் பக்கம்
சாய்த்து விடுகின்றன. அதே நேரம் பகத்சிங் கட்டுரையில் நூலாசிரியர் கருப்பு அங்கி
அணிந்து காந்தியின் பக்கம் எவ்வளவு வாதாடினாலும், காந்தியின்
எதிர் திசையிலே மனம் நிற்கிறது. Sorry
Sunil .. Gandhi could have save Bagath !
காந்தியின் வாழ்வில் நிகந்த சம்பவங்கள், காந்தியின் நகைச்சுவை ( அன்புள்ள புல்புல் கட்டுரை) ரசிக்க
வைக்கின்றன. பல சிறுகதைகளின் ஆத்மா அவற்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
காந்தியின் சாம்பலை முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளால் ஆன சிறப்பு ரயிலில்
கொண்டு போய் கரைத்தனர் என்ற தகவல் நெகிழச் செய்கிறது.
காந்தி குறித்தான கருத்துக்களும் பார்வைகளும் ஒரு நூலோடு
முற்றுபெறுவதில்லை. இன்னும் பல நூல்களைத் தேடச் சொல்கின்றன. காந்தியை ஒரு புனிதர்
என்றோ அல்லது அ.புனிதர் என்றோ எந்த ஒரு நூலாவது தீர்க்கமான சான்றுகளுடன்
வரையறுத்துவிட்டால் அந்தத் தேடலின் தாகம் தணிந்துவிடும். ஆனால் காந்தி அதற்கு
உடன்படுவதில்லை. சுனில் போன்ற நூலாசிரியர்களும் வாசகர்களை அப்படி தீர்மானிக்க
விடுவதில்லை. தொடர்ந்து காந்தியை ஒரு தர்க்கக் கூண்டுக்குள்ளேயே வைப்பதில் வெற்றி
பெறுகின்றனர்.காந்தியை மேலும் மேலும் அணுகச் சொல்கின்றனர். காந்தியும் அதை ரசித்துக்
கொண்டு புட்டம் தெரியும் குழந்தையாகக் கால் மேல் கால் போட்டுக் கவனம் ஈர்க்கிறார்.
சென்ற வாரம் வீட்டில் பல ஆண்டுகளாக வளர்ந்திருந்த பலா
மரத்தை வெட்ட வேண்டிய சூழல். வெட்டப்பட்ட மரத்தை பார்த்த பள்ளி முடித்து வந்த
பிள்ளைகள் எதுவும் சொன்னார்களா என்று மனைவியைக் கேட்டேன். “அவங்கென்ன 90s கிட்ஸா, எல்லாத்துக்கும்
cringe பண்ணிட்டு.. எல்லாம் GenZ..பாத்துட்டு அவங்க வேலையைப் பார்க்க போயிட்டாங்க” என்ற பதில் வந்தது. எதிர் நிலையில்
இருப்பவர் மனதிலே கூட அன்பை விதைத்து தன்பால் ஈர்க்கும் அன்பன் காந்தியின் தேவை
இன்றைக்கு எங்குள்ளது என்று புரிந்தது.
நன்றி அன்புள்ள புல்புல்.
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்.
*
Comments