உரையாடும் காந்தி

 


இந்திய தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து மகாத்மாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தலைவர்களின் எதிர்ப்புக்குரல் எல்லாத் திசைகளிலிலும் ஒலிக்கிறது. களத்தில் உள்ள காந்தியர்கள் மற்றும் காந்திய நிறுவனங்கள் அமைதியாகக் கடக்கின்றனர். ஏற்கனவே பெயர் வைக்கும்போதும் அவர்கள் ஆரவராம் செய்து கொண்டாடவில்லை. எனவே நீக்கும்போது கண்டிக்கும் அவசியம் வரவில்லை. இதைக் கடந்து உரையாடவும் செயலாற்றவும் அவர்களுக்கு நிறைய இருக்கிறது. இதில் ஒரு நன்மை நடிகர்கள் வீட்டு வாசலுக்கும் துக்க வீட்டு வாசலுக்கும் புரண்டோடும் தலையாயப் பணிகளுக்கு நடுவே காந்தியின் பெயரையும் ஊடகங்கள் உச்சரிக்கின்றன. அதற்காகவேணும் வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி.

காந்தி தொடர்ந்து எதையாவது சிந்தித்துக் கொண்டே இருந்தார். எதையாவது எழுதிக்கொண்டே இருந்தார்.எதையாவது செய்துகொண்டே இருந்தார். இவற்றிற்கு எல்லாம் மூலமாகக் காந்தி தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார் தனக்கு வெளியேயும் தனக்கு உள்ளேயும்.தன்னுடைய கருத்துக்களை விவாதத்துக்கு உட்படுத்தித் தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டே இருந்தார். பத்திரிக்கையாளர் சமஸ் காந்தியைப்பற்றிய ஒரு கேள்விக்கு “19 வயது வரை பத்திரிக்கை படிக்கும் பழக்கம் இல்லாத காந்தி , தென்னாப்பிரிக்கா சென்றபின் தன்னுடைய வாழ்க்கையை எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மாற்றத்தை நோக்கித் தள்ளப்படும்போது உரையாடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார். அந்த உரையாடலுக்கான சிறந்த வழியாக எழுத்தைத் தேர்ந்தெடுக்கிறார்” என்று பதில் அளித்திருப்பார்.

உரையாடும் காந்தி” கேள்வி பதிலாகவும் தனிக்கட்டுரைகளாகவும் ஜெமோவின் 32 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

ஜெமோவின் வழியாகக் காந்தியை அடைவது என்பது அலாதியானது துதி பாடலாகவோ அடிமைத்தனமாகவோ அந்த மொழி இருக்காது. மாறாக ஒரு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒரு வழக்குரைஞராக வாதிடுவதைப் போன்றது அந்த மொழி. எதிர் தரப்பையும் சட்ட நுணுக்கங்களுடன் சமாதானம் கொள்ளச் செய்யும் வாதம் அது.

உரையாடும் காந்தி நூலைப் பொறுத்தவரை அது காந்தியாற்றிய சொற்பொழிவுகளோ மாநாட்டுரையோ எழுத்துக்களோ அல்ல . மாறாக அவருடைய சிந்தனையாலும் செயலாலும் காந்தி எப்படி மற்றவர்களுடன் உரையாடினார் என்பதே இந்த நூல்.

குறியீடுகளின் நுட்பங்களை அறிந்தவர் காந்தி. அவர் தன்னையே ஒரு குறியீடாக இந்த மானிடத்தின் முன் வைத்தார். அவர் அணிந்து இருந்த உடை எளிமையின் தோற்றம், ஆங்கிலச் சுரண்டலுக்கு உள்ளான ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பிரதி என்பதை எல்லாம் தாண்டி, இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள அடித்தட்டு மக்கள் தங்களின் ஒருவராகக் காந்தியை உணர வைத்தது அவரது உடை என்று ஜெமோ குறிப்பிடுகிறார். காங்கிரஸில் இயல்பாய் இருந்த ம

பண்ணையார்த்தனத்திலிருந்து இந்திய விடுதலைப் போராட்டத்தை எளியவர்களின் கைகளுக்கும் கொண்டு சேர்த்தது காந்தியின் உடை என்கிறார்.

இன்னொரு சம்பவம் காந்தியை குருவாகக் கொண்ட லோகியாவிடம் நிகழ்ந்தது. லோகியா புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ளவர். காந்தி அதை நிறுத்த சொல்கிறார் லோகியா அதற்கு இது என்னுடைய தனிப்பட்ட உரிமை. இதில் தலையிடாதீர்கள் என்று காந்தியை மறுக்கிறார். மீண்டும் மீண்டும் காந்தி சொல்கிறார். லோகியா கேட்கவில்லை. காந்தி இறுதியாக ஒன்று சொல்லுகிறார் "புகை பிடிப்பது என்பது மேட்டுக்குடிகளின் குறியீடு அது எளிய மக்களில் இருந்து உங்களைத் தனித்து காட்டும் அது இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்குத் தடையாக இருக்கும் " . காந்தியின் இந்தப் பார்வையை உணர்ந்த லோகியா புகைப்பழக்கத்தைக் கைவிடுகிறார்.

காந்தி அம்பேத்கர் உறவை ஜெமோ வேறொரு திசையில் இருந்து பார்க்கிறார் . காந்தி அம்பேத்கரின் கருத்துக்களை ஒருபோதும் ஒதுக்காமல் அதை உள்வாங்கித் தன்னை மீள் உருவாக்கம் செய்து கொள்கிறார். போலவே அம்பேத்கரும் காந்தியிடமிருந்து மெருகேற்றிக் கொள்கிறார் என்று சொல்லுகிறார். நினைத்துப் பார்க்கலாம். தான் உமிழ்ந்த எச்சில் கூட மண்ணில் பட்டால் தீட்டாகும் என்று சொல்லப்பட்டுக் கழுத்தில் ஒரு கொட்டாங்குச்சியைக் கட்டி அதைச் சுமந்து திரிந்த சமூகப் பின்புலம் கொண்ட அம்பேத்கர் தன்னுடைய எழுத்தில் இருந்த தீயை ஆயுதமாகக் கைகளில் ஏந்தி இருந்தால் களம் எப்படி மாறி இருக்கும். அம்பேத்கர் காந்தியால் மிதவாதம் கொண்டார். காந்தி அம்பேத்கரால் தன்னை மாற்றிக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களோடு தீவிரமாக நின்றார்.

காந்தி சமயங்களில் இருந்து எடுத்துக் கொண்டது, அதன் கூறுகளில் இருந்து விலகி நின்றது எனப் பல்வேறு இடங்களில் தன்னுடைய ஆதாரங்களோடு வாதிடுகிறார் ஜெமோ. அதே நேரத்தில் காந்தியின் காமம், கள் மாமிச குறித்தான கொள்கைகளில் தன்னுடைய விலகலையும் பதிவு செய்கிறார்.

சில இடங்களில் நேரு அம்பேத்கர் மற்றும் கம்யூனிஸ்டுகள் குறித்தான ஜெயமோவின் விமர்சனங்கள் அவை தொடர்பான நூல்களைப் படிக்கச் சொல்கின்றன.அதே நேரத்தில் காந்தி குறித்தான இந்த நூலில் இந்த விமர்சனங்கள் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

நூலின் தொடக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றி எழுதும் போது இன்றைய சூழலில் சத்தியாகிரகப் போராட்டம் வெல்லுமா என தெரியாது. ஆனால் இந்த உலகில் வெல்லும் எந்தப் போராட்டமும் சத்தியாகிரகத்தின் வழியாகத்தான் நிகழும் என்று திட்டவட்டமாகச் சொல்லும் ஜெமோ நூலை முடிக்கும் போது காந்தியத்தைப் பின்பற்றுவதையோ மறுப்பதையோ தாண்டி இன்றைய சூழலுக்குத் தகுந்தவாறு காந்தியத்தை விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று சரியாக முடிக்கிறார்.

படிக்கப் படிக்க பல புதிர் முடிச்சுகளை அவிழ்த்தபடியே சில புது முடிச்சுகளை இட்டுக் கொண்டே செல்பவர். மகாத்மா.காந்திக்கு ஆயுதம் தேவைப்படவில்லை காரணம் காந்தியே ஆயுதமாக இருந்திருக்கிறார். இன்றும் இருக்கிறார் என்று மீண்டும் பதிய வைக்கிறது இந்த நூல் .

நன்றி ஜெமோ

பதிப்பகம் தன்னறம் நூல் வெளி

 

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு