இன்றைய காந்திகள்

 


தென் தமிழகத்தின் சிவகங்கை அரசின் கட்டுப்பாட்டில் அமைந்த ஒரு குறு நிலப்பரப்பு. சிவகங்கை அரண்மனையில் இருந்து செல்லக்கூடிய ரகசிய ஆவணங்கள் இந்தக் கிராம உறுப்பினர்களின் (நாட்டார் என்று சொல்வது வழக்கம்) பார்வைக்கு வந்த பிறகே இது போலவே இருக்கக்கூடிய மற்ற நாட்டார்களுக்குச் செல்வது வழக்கம். பல கிராமங்கள் உள்ளடக்கிய இந்தக் குறுநிலத்திற்குத் தலைவராக இருக்கிறார் ஒருவர். சிவகங்கை அரண்மனைக்கு மிகவும் நெருக்கமானவராகவும், மருது சகோதரர்களுக்கு நண்பராகவும் விளஙகுகிறார். சமயங்களில் மருது சகோதரர்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய இடத்திலும் இருக்கிறார். வழக்கமான ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சியில் பரம்பரை பரம்பரையாக சிவகங்கையை ஆண்ட ராஜ குடும்பத்திற்கும் பாதியில் வந்த மருது சகோதரர்களுக்கும் அதிகாரப் போட்டி உண்டானது. ஆங்கிலேயரை எதிர்த்த ராஜ குடும்பத்தோடு இந்த ஊர் தலைவர் நின்றார். மருது சகோதரர்கள் இவருக்கு எதிராக மாறினர். ஒரு பிரச்சனையில் சின்ன மருதுவின் வீரர்கள் இந்த ஊர் தலைவரைச் சிறை பிடிக்க முயல தன்மானத்திற்காகத் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு இறக்கிறார். ஆங்கிலேயருக்கு எதிராக நின்ற ஒரே காரணத்திற்காக சிவகங்கை அரசு குடும்பத்தை ஆதரித்து தன்னுடைய உயிரை, குடும்பத்தை, நட்பை அதுவரை கட்டிக் காத்த அந்த குறுநிலப்பரப்பை விட்டு வீர மரணம் எய்தவர் வளரி வேந்தன் வைத்திலிங்க தொண்டமான். அவர் வாழ்ந்த அந்தக் குறுநிலப்பரப்பு நான் பிறந்த அடைக்கலம் காத்த பட்டமங்கலம் நாடு.

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டம் அது. இது போலவே இந்தியாவின் மூலை முடுக்குகளில் எத்தனை எத்தனையோ பேர் தங்கள் உயிரை, வாழ்வை இழந்து கருத்தரித்தது தான் இந்த சுதந்திர இந்தியா என்பது பலர் அறிந்ததே.

விடுதலை அடைந்த பிறகு ஆங்கிலேயர் எச்சம் வைத்த வளங்களோடு, துண்டு துண்டாக இருந்த இன குழுக்களோடு கிடந்த இந்தியாவை அன்று பிறந்த குழந்தை போல எடுத்து மறு கட்டமைப்பு செய்து இன்றைக்கு நவீன இந்தியாவாக நம் கைகளில் கொடுத்தவர்கள் பலர். விடுதலைக்கு உழைத்த பெயர் தெரியாத பலரைப்போல இவர்களும் தங்களது தனிப்பட்ட வாழ்வை விருப்பத்துடன் கைவிட்டு தங்களது எண்ணங்களை, உழைப்பை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்கள். ஒரே வித்தியாசம் இவர்கள் கை கால்கள் இழக்கவில்லை. ரத்தம் சிந்தவில்லை. காரணம் மகாத்மா காந்தியும் அவரது காந்தியமும்.

இப்படிப்பட்டவர்களில் குரியன் லஷ்மி சந்த் ஜெயின், பங்கர் ராய், அருணா ராய், ராஜேந்திர சிங், அபய் பங், ராணி பங், சோனம் வாங்க்சுக், அரவிந்த் கண் மருத்துவமனை, இலா பட், அர்விந்த் குப்தா, ஜான் ட்ரெஸ் ஆகியோரைப் பற்றி எழுத்தாளர் பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களால் எழுதப்பட்டது இன்றைய காந்திகள்.

இது இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு அல்ல மாறாக இந்தியா இன்னும் பெரும் தேசத்தைக் கட்டமைத்த வரலாற்று குறிப்புகள். அமுல் நிறுவனம் தொடங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரை இவர்கள் ஆற்றிய பணிகள், அதற்கு சமூகத்தில் இருந்த எதிர்ப்புகள், நிர்வாகத்தில் நிகழ்ந்த குளறுபடிகள், இவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு உறுதுணையாக இருந்த தலைமை அமைச்சர்கள் எனக் கட்டுரை ஒவ்வொன்றும் ஒரு நாவலுக்குரிய உண்மைக் கதைகள்.

நேரு தொடங்கி விடுதலை இந்தியாவுக்கு கிடைத்த தலைமை அமைச்சர்கள், மேற்கண்ட அத்தனை பேருக்கும் எவ்வளவு உறுதுணையாக இருந்தார்கள் என்பது ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெரிகிறது. புறவாழ்வின் வெளிச்சமாக தலைவர்கள் இருந்தாலும் மேற்கண்டவர்களின் அகத்தில் என்றும் என்றும் அணையாத ஒளியாக மகாத்மா இருந்தார் இருக்கிறார்.

அமுல் நிறுவனம் தொடங்கியவர்களில் ஒருவரான டாக்டர் குரியன் குஜராத்தில் உள்ள ஆனந்த் நகரில் ஊரக மேலாண் கழகத்தை நிறுவுகிறார். ( Institute of Rural Management, Anand Nagar _ IRMA) இந்திய ஊரக வளர்ச்சி மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் தங்களது முத்திரையைப் பதித்து வரும் இர்மா அகமதாபாத் இந்திய மேலாண் கழகத்தை விட வசதியானது. இந்த நிறுவனத்தைச் சுற்றி பார்த்த மாநில முதல்வர் கேட்டாராம் "ஊரக மேலாண் கழகத்திற்கு ஏன் இவ்வளவு வசதியான கேம்பஸ்?" என்று. அதற்கு டாக்டர் குரியன் சொன்ன பதில் "முதல்வர் அவர்களே, நான் அரசர்களைப் பன்றி கொட்டில்களில் வளர்ப்பதில்லை".

அப்படி வளர்ந்த அரசர்கள் நாம்தான் நேரு உள்ளிட்ட தலைவர்களை இன்று அடிக்கடி கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்கிறோம். ஆங்கில அரசில் பல நாட்கள் சிறையில் இருந்த போது சாட்டப்பட்ட குற்றங்களைக் காட்டிலும் இப்பொழுது நொடிக்கு நொடி அவர்களின் பாவக்கணக்கு ஏறிக் கொண்டிருக்கிறது. அவர்களும் விரும்பியே அந்தக் கூண்டில் தினந்தினம் ஏறிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இந்தக் கூண்டு அவர்கள் கட்டிய கூண்டு. அவர்கள் விருமபிச் சுமந்த இரும்புச் சிலுவை.

நன்றி பாலசுப்ரமணியம் முத்துசாமி 

பதிப்பகம் தன்னறம் நூல்வெளி

 


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு