செம்மாதுளை

 

 


"படைகள் மோத நாள் குறித்தாகிவிட்டது. பாகனேரியில் களம் அமைந்தது. ஒரே பாசறையில் இருந்து வெவ்வேறு திசை நோக்கிப் பாய வேண்டிய கள்ளர்கள் எதிர்முகம் நோக்கி கச்சை கட்டினார்கள். அந்நியப் படையை நிர்மூலமாக்க வேண்டிய தென்திசை முன்னோடிகள் ஆர்த்தெழுந்து ஒருவரை ஒருவர் விழுங்குவது போல் களத்தில் குதித்தார்கள். பாகனேரி அழுதது. அதைக்கேட்டு பட்டமங்கலம் துக்கிட்டது . கள்ளர் தேசமே கண்கலங்கி நின்றது. யார் தோற்றாலும் கள்ளர்தானே தோற்பர் என்று கூற ஒரு புலவர் கூட அப்போது இல்லை. இனத்தார் ரத்தத்தில் இனத்தால் நீந்துவதா என்று எடுத்துரைக்க எவரும் முன்வரவில்லை. ஒரே உலைக் களத்து வாட்கள் எதிர் நின்று உராய்ந்தன. உறவினர் அங்கங்களை உறவினர் பதம் பார்த்தனர். விறகுடைத்துப் போட்டது போல் கள்ளர் பிணம் குவிந்தது. வெற்றி என்ற இறுதி நிலைக்கு எப்படையும் வரவில்லை. மானுக்கும் மயிலுக்குமா சண்டை ? நரிக்கும் ஓநாய்க்குமா பகை ? வேங்கைக்கும் வேங்கைக்கும் அல்லவா கலகம்! அங்கே வெற்றி என்பது கல்லில் நார் உரிப்பதைக் காட்டிலும் கடினமாக தானே இருக்கும் !"

- சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு.

செம்மாதுளை எங்கள் ஊர்க் கதை. எங்கள் பட்டமங்கல நாட்டிலும் பாகனேரி நாட்டிலும் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பிரச்சனை பெரிதாகி இரண்டு நாடுகளுக்கு இடையே எரிந்தது. இன்று வரை இந்த இரண்டு ஊர்களுக்கிடையே கள்ளர் சமூகத்தில் திருமண உறவு வைக்காத அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பட்டமங்கலம் அம்பலகாரர் வைரமுத்தன் வளர்த்த யாராலும் பிடிபடாத மஞ்சுவிரட்டுக் காளை பாகனேரி மஞ்சுவிரட்டில் பாகனேரி அம்பலகாரர் வாளுக்கு வேலியால் பிடிபட்டு அதோடு மட்டுமல்லாமல் கருநாகம் போன்ற தன்னுடைய வாலையும் வெட்டக் கொடுத்துவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட பட்டமங்கல நாட்டுக்கு வந்தது பகைக்கான பிள்ளையார் சுழி.

இந்தப் பகை பல்வேறு பிரச்சினைகளோடு வளர்ந்து பட்டமங்கல நாட்டு பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு போகும் அளவுக்குச் சென்று இறுதியில் வாளுக்கு வேலியின் மரணத்தில் வந்து நின்றது. இதில் இரண்டு புலிகளுக்கு இடையே மாட்டிய மானாய் சிதைந்து போகிறது பாகனேரியில் பிறந்து பட்டமங்கலத்தில் திருமணமான கல்யாணி என்னும் பேரழகியின் வாழ்வு . கூடவே நின்று எரியும் சுந்தராம்பாள் என்னும் சுடரின் குளிர் தீபமும்.

கலைஞர் கருணாநிதி அவர்களால் விரிவாக எழுதப்பட்டு பின்பு 90களில் தொடராக தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட தென்பாண்டி சிங்கத்தின் மூலக்கதை இந்த செம்மாதுளை.

புனைவெழுத்தாக இருந்தாலும் இன்றைக்கும் கொழுந்துவிட்டு கொண்டிருக்கும் இரு நாடுகளைப் பற்றி எழுதும்போது அதீத கற்பனை இல்லாமல் உண்மையாகவும் உண்மைக்கு அருகிலும் எழுத வேண்டிய கட்டாயம் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள திருக்கோட்டியூரில் பிறந்த சிறுகதை மன்னன் எழுத்தாளர் ஐயா எஸ் எஸ் தென்னரசு அவர்களுக்கு நிறையவே இருந்திருக்கிறது. அதற்காகவே சம்பந்தப்பட்ட இந்த இரண்டு குடும்பங்களின் வாரிசுகளிடமும் மற்ற பெரியவர்களிடமும் அதிக நேரம் செலவழித்து தகவல் பெற்ற தென்னரசு ஐயாவின் உழைப்பைச் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் கலைஞர் எழுதிய தென்பாண்டி சிங்கம் நாவலின் எல்லா பக்கங்களிலும தென்னரசு ஐயாவின் உழைப்பு ஒட்டியும் மறைந்தும் இருக்கிறது. இந்த மூலக்கதை படித்த பின்பு தான் தென்பாண்டி சிங்கத்தில் கலைஞர் செய்த சித்து விளையாட்டுக்களை உணர முடிகிறது. சுதந்திர போராட்டம் மருது பாண்டியர்களால் தெற்கு சீமையிலே அனல் அடித்துக் கொண்டிருந்த காலம் அது. ஆகவே அந்தப் போராட்டத்தில் பாளையநாட்டு பங்கையும் கலைஞர் இணைத்து இருப்பார். மாமனும் மைத்துனனும் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும் ஊமைத்துரைக்காகவும் மருது பாண்டியருக்காகவும் ஆங்கிலத் துப்பாக்கிகளின் முன் ஒரே சமயத்தில் வாளேந்தி நிற்பர். அப்படி ஏந்திய ஈட்டியோடும் வளரியோடும் இன்றைக்கும் அவர்களில் ஒருவரான வாளுக்குவேலி அம்பலகாரரின் சிலை கத்தப்பட்டு கிராமத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பல ஆண்டு கோரிக்கைக்குப் பின்பு தமிழக அரசு அம்பலக்காரர் வாளுக்குவேலிக்கு அரசு விழா எடுத்து சீரும் சிறப்புமாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. இந்த விழாவில் மூலக்கதை எழுதிய ஐயா எஸ் எஸ் தென்னரசு அவர்களின் குடும்பத்தையும் அழைத்து ஒவ்வொரு வருடமும் மரியாதை செய்தால் இந்த விழா இன்னும் முழுமை பெறும். இரண்டு நாடுகளின் பெரியவர்களுக்கும் பட்டயங்களுக்கும் மட்டுமே தெரிந்த வரலாற்று நாயகர்களை இன்றைக்கு உள்ள தலைமுறைக்கும் கொண்டு வந்த சேர்த்த ஐயா எஸ் எஸ் தென்னரசுக்கான மரியாதையாக மட்டும் அது இருக்காது. மாறாக கலைக்கும் மொழிக்கும் பரிவட்டம் கட்டும் செயலாக அது மாறி நிற்கும். அரசு ஆவண செய்யும் என்று நம்புவோம்.

நன்றி ஐயா தென்னரசு.

பதிப்பகம் சீதை பதிப்பகம்.

 


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு