யானை டாக்டர்
20 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட ஒரு யானையின் அழுகிய சடலம் அதை வெட்டி
விரித்து நான்கு பக்கமும் பரப்பப்பட்டிருந்தது. அந்த உடலுக்குள் யானையின் அழுகிய
சதை சேற்றுச் சகதியாகத் தோற்றமளித்தது. அந்தச் சேற்றுக்குளம் எங்கும் புழுக்கள்.
அந்தப் புழுக்கள் கால்கள் கைகள் என ஏறி கழுத்து வரை செல்கின்றன. அதைத் தட்டி
உதிர்த்தபடி கைகளில் கத்தியோடு அந்த யானையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் யானை டாக்டர் கே
கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
படிக்கும் ஓரிரு நிமிடங்களிலே அந்த நாற்றம் நம்மைச்
சூழ்ந்து கொள்ளும் போது அதையே தன் வாழ்வியலாக
விரும்பி ஏற்றுக் கொள்கிறார் டாக்டர் கே கிருஷ்ணமூர்த்தி. அவரை மூலமாக வைத்து அடுத்தத் தலைமுறையின் முன்
நிறுத்துவதற்காக ஜெமோவால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை யானை டாக்டர். தன்னறம் பதிப்பகத்தால் தனி நூலாக
வெளிவந்துள்ளது.
வலிகளைக் கவனிக்கச் சொல்லுவது வலிகள் என்பது தியானத்தைப்
போல என்பது புழுக்களை ஒரு கைக்குழந்தை போல எடுத்துக் கொள்ளச் சொல்வது எனக் கதை
சொல்லிக்கும் டாக்டருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இச்சிறுகதையில் ஜெமோவின் புனைவின் தனி ஆவர்த்தனம்.
அரசு வேலையில் கீழ் நிலையில் உள்ள பணியாளர்களைப் பற்றிச்
சொல்லும் போது "அவர்களைக் கை கால்களாகக் கொண்டுதான் நாங்கள் செயல்பட
முடியும். அவர்களை எங்கள் மூளை இயக்க வேண்டும். நாங்கள் அவர்களைச்
சார்ந்திருக்கும் போதும் அவர்கள் எங்களை சார்ந்து இருப்பதான பிரம்மையை உருவாக்க
வேண்டும். அதற்குத் தான் எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலிருந்து கீழே
வந்து இவர்களைத் தொடும் அரசு அதிகாரத்தின் விரல்நுனி மட்டும் தான் நாங்கள் . ஒரு
வகையில் அவர்களை வேவு பார்ப்பவர்கள். அவர்களுக்கு ஆணையிடும் அரசாங்கத்தின் நாக்கு
நுனி அல்லது சவுக்கு நுனி" என்று எழுதி இருப்பார் ஜெமோ.
இந்தச் சிறுகதையில் டாக்டர் கே அவர்களின் உயிர் நேயத்தை
வியப்பதா அல்லது ஜெமோவின் எழுத்துக்களில் சிக்குவதா என்பதில் ஊஞ்சல் ஒன்று
முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கும்.
நன்றி ஜெமோ
பதிப்பகம் தன்னறம் நூல்வெளி
Comments