பதினொரு நிமிடங்கள்

     ஞானத்தின் சிகரெட்

 


பிரேசிலிய எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ எழுதித் தமிழில் க. சுப்பிரமணியன் அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் “பதினொரு நிமிடங்கள்”

பிரேசிலில் ஒரு கிராமப்புறத்தின் சாதாரணக் குடும்பப் பின்னணி கொண்ட ஒரு பெண்ணின் ஆசையில் தொடங்கி அவள் தேடலோடு தொடர்ந்து அவளின் தன்னறிதலோடு முடியும் நாவல். 

கணவன், இரண்டு குழந்தைகள், கடற்கரையை நோக்கிய ஒரு வீடு இவ்வளவுதான் மரியாவின் ஆசை. அதற்கான வழி அவளை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறது. அவள் எங்கெல்லாம் விரும்பிச் செல்கிறாள், விரும்பாத இடங்களில் எப்படி தன்னை மீளுருவாக்கம் செய்கிறாள் என கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்களில் பெரிதாக எந்தச் சோர்வும் இன்றி நகர்த்துகிறது.

இது பெண்ணியம் பேசும் நாவல் இல்லை. மரியாவுக்குப் பதில் எந்த ஒரு ஆணும் தன்னை அந்தப் பாத்திரத்தில் பொருத்திக் கொள்ள முடியும். எந்த ஒரு இடத்திலும் புறச்சூழல்களைக் காரணியாக்காமல் தனக்கான பயணத்தில் தன்னை மட்டுமே வினையாகவும் விளைவாகவும் நம்பும் ஒரு மனம். யதார்த்தங்களோடு நடந்தும் யதார்த்த மனிதர்களோடு பழகியும் தன்னை அந்த யதார்த்தங்களில் இருந்து விலக்கி பார்க்கும் அசாதாரணி / அசாதாரணன் மரியா.

சிறுவயதில் தான் நேசித்த சக வயதினன் தன்னிடம் வந்து பென்சில் கேட்கையில் அவனை எதிர்கொள்ள இருந்த அச்சம் , அவனைப் புறக்கணித்த தருணம் அதனால் அவளுக்குக் கிடைத்த உளச்சோர்வு, காதல் என்றாலே பெருந்தவிப்பு என்ற முடிவுக்கு வருகிறாள். அதே நேரம் காதல் அவளை விடவில்லை. தொடர்ந்து துரத்துகிறது. வேறொரு உருவில் , வேறொரு வடிவில்.  ஆனால் அறிதலுக்கும் உணர்தலுக்கும் இடையே மனம் நடத்தும் சுவராசியமூட்டும் விளையாட்டு இந்த வாழ்வு. இரண்டு பக்கமும் மரியா நிற்கிறாள். அவளே பந்து போடுகிறாள். அவளே மட்டையோடும் நிற்கிறாள்.

தனது கால்களுக்கிடையே வரும் ரத்தம் தன்னை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்பும்,  ஒரு காதலனை உதடுகள் வரை மட்டுமே முத்தத்திற்கு அனுமதித்துவிட்டு வாய்க்குள் அனுமதியாது சக தோழிகளின் கேலிகளுக்குச் சுருளும், இளவயது சாகசமான முடி நீக்குதலில் முதல் முறை சுய இன்பம் அடையும் ஒரு சிறுமி என இயல்பான ஒருத்தியைக் காலம் வேறோருத்தியாக மாற்றுகிறது. 

 

ஜவுளிக்கடையில் வேலைக்கு சேரும் அவள் தன் முதலாளியின் காதல் பார்வையை ஏற்று நடிக்கும் சூட்சுமம் கொண்டவளாகத் தன்னை உயர்த்திக் கொள்கிறாள். தனக்கு நிகழ்ந்த சிறு சிறு சம்பவங்களில் இருந்து பெரிய விஷயங்களை, செய்திகளை, புரிதலைப் பெற்று அறிவுத்தளத்தில் தன்னை மேல் நோக்கி நகர்த்தியபடியே இருக்கிறாள். இதில் ரசனைக்குரிய விஷயம் என்னவென்றால் பல கசப்பான / இனிப்பான நிகழ்வுகளுக்குப் பிறகும், தன்னை முழுமையாக அறிந்த நாவலின் இறுதிப் பகுதியில் கூட அந்த ஜவுளிக்கடை முதலாளியைத் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய சொந்த கிராமத்தில் ஒரு யதார்த்த வாழ்க்கையை வாழ விரும்புகையில் சட்டென்று சிறுமியாகிறாள்.

வெற்றழகியாக இருக்கும்போது தன்னுடைய தேடல்களால் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறாள். பேரறிவு கொண்ட பின்பு சின்னஞ்சிறு மழலையாக, அப்போது பெய்த மழை நிலமாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறாள்.

 

பிரேசிலின் ஒரு கிராமத்தில் தொடங்கி அங்குள்ள ஒரு நகரத்திற்குச் செல்லும் அவளது பயணம் சுவிட்சர்லாந்து வரை நீண்டு அவள் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுடனான உரையாடல்கள் என ஒவ்வொன்றும்  வாழ்வை நோக்கி எழுப்பும் கேள்விகள் மரியாவுக்கு மட்டும் நிகழாது படிப்பவர் ஒவ்வொருவருக்கும் நிகழும்.

 

நாவலாக  நகர்ந்து கொண்டிருந்த மரியாவின் வாழ்வு இரண்டு ஆண்களைச் சந்திக்கும் பொழுது கவிதையாக மாறுகிறது. ரால்ப் மற்றும் டெரன்ஸ்.

 

எதையும் பெற்றுக் கொண்டே இருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது. போலவே எதையும் இழந்து கொண்டே இருப்பதில். இழந்து இழந்து பெறுவதில் தானே சகலமும் ஒளிந்திருக்கிறது; நிறைந்து இருக்கிறது.  இருவரிடத்திலும் அவள் தன்னை இழக்கிறாள் அதே நேரம் தன்னைப் பெறுகிறாள். இழந்தும் பெற்றும் இழந்தும் பெற்றும் மரியா நடத்தும் அரங்கேற்றம் ஒவ்வொரு முறையும் புதுப்புது அருவிகளில் குளிக்கும் சுகம்.

 

இரால்பும் டெரன்சும் உடல் தேடி வந்தவர்கள் அல்ல. அவர்கள் வரும் இடங்களில் மெல்லிய புல்லாங்குழல் இசைக்கு பனி பெய்தும் விறகு எரிந்தும் மனதை மையல் கொள்ளச் செய்கின்றன.

 

எரிந்து கொண்டிருக்கும் மரியாவின் உடலின் முன் உணர்வுகளை உருக்குகின்றனர் ரால்ஃபும் டெரன்சும். ரால்ஃபிடமும் டெரன்சிடமும் முதல் சந்திப்பிலேயே தன்னை அறியாமல் மரியா தன்னை இழக்க தொடங்குகிறாள். உடலால் அல்ல.

 

அவர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளும் உரையாடல்களும் ரம்யத்தினும் ரம்யம்  . எவ்வளவு ரம்யம் என்றால் ஆழ்கடலின் அமைதிக்குள் மூச்சைப் பற்றி யோசிக்காமல் அல்லது வனாந்திரத்தின் ஒளித்தூறல் விழுந்து செடிகளில் விளக்கெரியும் ஒரு சின்ன இடத்தில் நிகழும் புணர்ச்சிக்கு ஒப்பான ரம்யம். மரியாவுக்கும் அவர்களுடனான  தனித்தனியான இரண்டாவது  சந்திப்பில் காமத்தின் உச்சம் கிடைக்கிறது. மீண்டும் உடல்களின் சேர்க்கையால் அல்ல.

 

டெரன்ஸ் முழுதும் அடிமைப்படுத்தி வலி கொடுத்து வேதனைக்குள்ளாக்கி அவளை மீள் உருவாக்கம் செய்கிறான். அதே நேரத்தில் அவளும் மனதால் அவன் முன் மண்டியிடாமல் தன் பேரறிவுத் திமிரோடு ஞானத்தின் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறாள்.

 

ரால்ஃப் உடனான  காமத்தில் அவனுக்கு ஆசிரியராக சொல்லிக் கொடுக்க நினைத்து காதலிலும் வாழ்விலும் அவனிடம் பயிலும் மாணவியாகத் திரும்புகிறாள். மீண்டும் பென்சில் கேட்க வந்த ஒருவனை நேசித்து மறுதலிக்கும் அல்லது மறுதலித்து நேசிக்கும் பள்ளி மாணவியாக மரியா உருமாறுகிறாள்.

 

நாவல் எங்கும் காமம் நிகழ்கிறது. ஆனால் காமத்தோடு மட்டும் பேசாது உணர்வுகளோடு பேசுகிறது. பாலியல் தொழிலில் அன்றாடம் நிகழும் காமத்தை வெறுமனே கால்களை அகட்டுவதோடு நிறுத்திக் கொள்ளும் நூலாசிரியர். ரால்ஃப் மற்றும் டெரன்ஸ் உடனான காமத்தில் மட்டும் காமத்தின் வாளையும் உணர்வுகளின் வாளையும் ஒன்றோடு ஒன்று மோதவிடுகிறார் ஒன்றை ஒன்று ஆறுதல் படுத்தச் செய்கிறார்.  கிட்டத்தட்ட மரியாவாகவே தன்னை மாற்றிக் கொள்கிறார் நாவலாசிரியர். போலவே வாசகர்களும் பால் நிலை மறந்து தம்மை மரியாவாக சிந்திக்க எத்தனித்தலே இந்த நாவலின் வெற்றி.

 

பொதுவாக நாவலில்  அனுமதிக்கப்பட்ட கிளைக்கதைகள் எதுவுமின்றி நாவல் ஒரு நேர்கோட்டில் செல்கிறது. ஒரு இடத்தில் மட்டும் மரியாவின் நூலகத்தோழியின் அனுபவமொன்று தனியே துருத்திக் கொண்டிருக்கிறது.

 

நாவல் முழுக்க வரும் இன்னொரு கதாபாத்திரம் மரியாவின் டைரி. மரியாவின் எல்லா போர்க்களங்களும் அந்த டைரி பக்கங்கள் தான். தன்னுடைய இயல்புக்கும் இலக்குக்கும் அந்தப் பக்கங்களில் தான் மாறி மாறி புரளுவாள். எழுந்து நிற்பாள். சிரிப்பாள்; அழுவாள்; தோள் சாய்வாள் இப்படி எல்லாமே. அந்த டைரி குறிப்புகளைப் படிக்க படிக்க ஏதோ ஒரு வாசம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும். இச்சைக்கும் அறத்திற்கும் அலைந்து திரிந்து களைத்து வரும் நம் சுயத்தின் வேர்வை வாசமாகக் கூட அது இருக்கும்.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு