தன்மீட்சி

 





ஊரில் பெரியப்பா ஒருவர் இருக்கிறார். சிவாச்சாரியார். பெரியப்பா என்று உள்ளன்போடு நினைக்கும் அளவிற்கு எந்த வேறுபாடும் இல்லாமல் உண்மையான உறவாகவே மூன்று தலைமுறைகளாகப் பிணைந்திருக்கும் குடும்பம். நாங்கள் மட்டுமில்லை ஊரில் உள்ள எல்லா குடும்பங்களுடன் உறவாக வாழும் குடும்பம். பெரியப்பா சிறுவயதில் இருந்து மிகவும் சிரமப்பட்டவர். தாத்தா கோவில் பூஜை தான் குடும்பத்தின் ஒரே வருமானம். ஐந்து சகோதரிகளுடனும் ஒரு தம்பி உடனும் வாழ்ந்த பெரியப்பா குடும்பத்திற்காக கடல் தாண்டுகிறார். கடல் தாண்டுதலின் எல்லை எதுவென்றால் திருமணம் ஆகி பெரியம்மாவை விட்டு வந்து சில ஆண்டுகளுக்குப் பின்பு ஊர் திரும்பியவுடன் தன்னுடைய மகளே தன்னை மாமா என்று அழைக்கும் அளவுக்கு உள்ளத்தாலும் வருந்தியவர். அதற்கு பலனாகப் பொருளாதரம் உயர்ந்தது. பொருளாதாரம் உயர்ந்தாலும் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கும் அவருடைய குணத்தால் புகழும் நிறைந்தது.மகனைப் போல ஒரு தம்பியையும் தம்பியைப் போல ஒரு மகனையும் வளர்த்தார். அவருக்கு ஈடாகவும் சொல்லப்போனால் அதற்கும் மேலாகவும் அவருடைய தம்பியும் மகனும் செய்த பல நற்காரியங்கள் அவருடைய ஆன்ம திருப்திக்குப் பலம் சேர்த்தன. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பத்தை இயற்கை வலுவாகத் தாக்க ஆரம்பித்தது. தந்தை,அக்கா, தங்கை எனத் தொடர்ந்து மூன்று மரணங்கள் அவரை நடுங்க வைத்தன. அதற்கு மேலாக அவர் ஆசையாக வளர்த்த (தம்பி மற்றும் மகன் ) சித்தப்பா மற்றும் தம்பியின் மரணங்கள் எங்கள் ஊரையே நிலைகுலையச் செய்தன. தனிப்பட்ட முறையில் எனக்கு அது பேரிழப்பு. அந்த இழப்பில் இருந்து மீண்டு வர இன்னும் ஒரு பக்கத்தில் போராடி கொண்டு தான் இருக்க வேண்டி இருக்கிறது.

அருகில் இருப்பவருக்கே இந்த வேதனை என்றால் பெரியப்பா தன் அகத்தினுள் எவ்வளவு துயரத்தோடு போராடிக் கொண்டிருப்பார். தனக்கு அதுவரை எல்லாமுமாக இருந்த தம்பி, தன்னுடைய நீட்சியாக வருங்காலத்தை தொடரப்போகும் மகன் என இருவரை இழந்த பிறகு நிகழ்காலத்தில் அவர் வாழ்வின் அர்த்தம் என்ன என்ற கேள்வி அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். இருந்தும் அவர் ஓடுகிறார் முன்பை விட இன்னும் வேகமாக இன்னும் அதிகமாக. ஒரு நாளில் எங்கள் ஊரில் மட்டும் ஆறு கோவில்களில் ஆகம பூஜை செய்ய வேண்டும். எங்கள் ஊரைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களிலும் உள்ள குடும்பங்களில் நடக்கும் சுப நிகழ்வுகளுக்கு அவர்தான் நாள் குறித்து தருகிறார். பல நிகழ்வுகளை அவரே முன்னின்று நடத்துகிறார். பல கோவில்களில் நடக்கும் திருக்குடமுழுக்கு யாக பூஜைகள் என எல்லாவற்றையும் அவரே நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் கடல் தாண்டியும் அவருடைய ஆன்மீகப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகம் தவிர்த்து பல சமூகப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

கோவில் பணி என்பதால் அதிகாலையிலே எழுந்து யாமம் வரை ஓடிக் கொண்டிருக்கும் பெரியப்பாவை இயக்குவது என்ன? இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற பின்பும் அவர் பெறத் துடிப்பது என்ன? அவருக்கு தேவையான பொருளாதாரம் அவரே எதிர்பார்க்காத புகழ் என எல்லாம் இருந்தும் ஓய்வும் தனிமையும் தேவைப்படும் இந்த நேரத்தில் அயராது உழைக்க வைக்கும் அந்த உள்ளொளி என்ன இப்படி பல கேள்விகள்.

இந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் ஜெமோவின் நூல் தன்மீட்சி. படைப்பாக்கத்தில் கிடைக்கும் இன்பத்தை விட முழுமையான இன்பம் தன்னைச் சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள் என்று ஜெமோ இந்த நூலில் சொல்லி இருக்கிறார். பெரியப்பாவிடம் இன்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் தன்னை இழந்து இருக்கிறார். இழந்தும் தன்னைச் சுற்றி உள்ள முழுமையை உணர்ந்திருக்கிறார்.

ஜெமோவின் தன்மீட்சி நூல் தன்னம்பிக்கை நூல் அல்ல. 'தன்'னோடு உரையாடும் நூல். பொதுவாக எந்த முன் முடிவோடும் தன்னுடைய அடையாளங்களுடனும் ஒரு நூலை வாசிக்க கூடாது என்பார்கள். நூலைப் படித்து முடித்தவுடன் எல்லா அடையாளங்களும் மொத்தமாக இறங்கிச் செல்வதை உணர வைத்த நூல்.

கழிவிரக்கத்தின் உச்சியில் நின்று தற்கொலை செய்ய துணிந்தவனிடம் நீ நிற்பது மலையே அல்ல. உன்னால் கற்பனை பண்ணவே முடியாத ஒரு பெரிய மலை உன் முன்னால் தான் இருக்கிறது முடிந்தால் அதைப் பார்க்க முயற்சி செய் தொடர்ந்து செயலாற்றினால் அதன் உச்சிக்கு செல்லலாம். வேண்டுமானால் அங்கு போய் செத்துப் போ. அந்தச் சாவில் ஒரு முழுமை இருக்கிறது. இந்தத் தொனியே நூல்.

நிறைய எழுதலாம் இந்த நூலை பற்றி. ஆனால் மனம் ஒன்றி இந்த நூலை வாசிப்பதில் கிடைக்கும் அதிர்வு ஒரு சின்ன குறிப்பில் கொண்டு வருவது கடினம்.

வாசியுங்கள் .

பதிப்பகம் தன்னறம் நூல்வெளி

 

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு