செயலறம்

 


மீண்டும் காந்தி. மீண்டும் தன்னறம்.. மீண்டும் சித்ரா அம்மா..ஆனால் இந்த முறை பதினாறு காந்திகள் புதிதாகப் புதிதாக.

பொதிகைத் தொலைக்காட்சியில் காந்தி குறித்த நிகழ்ச்சிக்காக நடந்த நேர்காணல்களின் தொகுப்பு "செயலறம்".

காந்தியக் கோட்பாடுகளில் ஊறித் திளைத்தவர்கள், காந்தியோடு பழகியவர்கள், காந்தியை உளமார அடைந்தவர்கள் என 16 பேரோடு நடத்திய நேர்காணல்களில் காந்தி ஒவ்வொருவருக்கும் வேறுவேறாக இருக்கிறார்.

பத்திரிகையாளராக, எழுத்தாளராக, களச் செயல்பாட்டாளராக, தத்துவவியலாளராக,மருத்துவராக நோயாளியாக இந்த நூலில் காந்தியின் அவதாரங்கள் பல.

பதில்களில் உள்ள ஆச்சரியங்களைக் காட்டிலும் அதிகமாக வியந்தது சித்ரா அம்மாவின் கேள்விகளுக்கு பின்னால் உள்ள உழைப்பு. காந்தியை எந்தப் புள்ளியில் கண்டடைந்தீர்கள் என்ற ஒரு பொதுக் கேள்வி தவிர ஒவ்வொருவரிடம் அவர்கள் துறை சார்ந்த கேள்விகள். அந்தத் துறை சார்ந்த கேள்விகளில் காந்தியக்கோட்பாடுகளையும் பதில் அளிப்பவரின் காந்திய அனுபவங்களையும் வளையங்களாக இணைத்து காந்தி என்னும் தேரை இழுத்திருக்கிறார். நேர்காணலுக்கான முன்மாதிரி இந்தத் தொகுப்பு.

இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள். காந்தியின் சகோதரர் மகன் கனு காந்தி எடுத்த புகைப்படங்கள். பல புகைப்படங்களில் காந்தியோடு சேர்த்து அருகில் இருப்பவர்களின் உணர்வுகள் அப்படியே காலம் தாண்டி நம்மிடம் வந்து நிற்கின்றன. குறிப்பாக நேருவும் காந்தியும் ஒருவரை நோக்கி ஒருவராக அமர்ந்திருக்கும் படம். நேருவின் கண்கள் தவிர மற்ற உடல் பாகங்கள் காந்தி என்னும் தத்துவத்தை ரசித்திருக்கும் பாவனையில் இருக்கும். நேருவின் அந்தக் கண்கள் ..சொல்லு மச்சி..த்தா பாத்துக்கலாம் என்ற அதிகாரத்தோடு காந்தியை அணுகும்.

அடுத்த பக்கத்தைப் புரட்ட விடாமல் செய்த இன்னொரு புகைப்படம் காந்தி தன் மனைவியின் இறந்த உடல் அருகில் வெள்ளாடையை முழுவதும் போர்த்தி தலை மட்டும் தெரிய பார்த்துக் கொண்டிருப்பார் ஒரு வெள்ளைப் பறவை இறந்து கிடக்கும் குஞ்சைப் பார்ப்பது போல . கருணையின் அதிபதி அந்த இடத்தில் காதலைப் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்.

இந்த நூலில் " You cannot change this rascal " என்று சர்ச்சிலால் பேர் பெறுகிறார் காந்தி. இன்னொரு இடத்தில் காந்தியின் பெயரால் சங்கம் ஆரம்பித்த மார்ட்டின் லூதர் கிங்கிடம் காந்தி கிறிஸ்தவர் அல்ல அவர் பெயரால் ஏன் என்று எதிர்ப்பு வரும் போது மார்டின் சொல்லுகிறார் "உலகின் மிகச்சிறந்த கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக இல்லை என்பதில் தப்பில்லை" .இப்படிக் காந்தி என்னும் ஊஞ்சல் மேலும் கீழும் இன்று வரை ஆடி கொண்டிருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து அந்த ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும்

பதிப்பகம் தன்னறம் நூல்வெளி

 

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு