கவிதை

 

முப்பதுக்குள் நுழைபவளின் தெளிந்து கொண்டிருக்கும் இடையைப் போலப் புலர்ந்து கொண்டிருக்கிறது வானம். மெல்லமாகவும் கொஞ்சமாகவும் தெரிகிறது பரிதி. தீர்ந்து தீர்ந்து நிறைந்தும், நிறைந்து நிறைந்து தீர்ந்தும் சற்றுமுன் வரை நாம் விளையாடிய விளையாட்டில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. அச்சமூட்டாத வனம் நமக்கு அரணாக இருக்கையில் ஆடைகளுக்கு நம் பாதி உடல் போதுமானது. முன்னிரவில் நமக்களித்த சிறகுகளை எடுத்துகொண்டு இரை தேட கிளம்பிற்று இரு பறவைகள். அதற்காக அவை திரும்பி வரும் மாலைக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. இயல்பற்றதாய் நீ உள்ளிழுத்துப் பின் உலகிற்கு ஈந்து கொண்டிருக்கும் மூச்சுக் காற்று நீ தூங்கவில்லை என்றது. ஒருக்களித்து உரசிக் கொள்ளும் உன் கெண்டைச் சதைக்கும் பின்னந் தொடைக்கும் இடையில் சிக்கி லயித்திருந்தது ஒரு சின்னஞ் சிறு செடி. கருணையில் நான் அச்செடி தளர்த்த மீண்டும் துளிர்த்த காமமெனக் கருதி லேசாகச் சிணுங்கினாய். அசைந்து பூத்த அந்தச் சிணுங்கலுக்கு முன்னம் ருசித்த ஈச்சம்பழ வாசம். இமைகள் திறக்காது இதழ் விளிம்புகளில் இடுக்கி வைத்த சிரிப்பைக் கன்னக்குழி காட்டிக்கொடுத்தது. எப்பொழுதும் காமம் காமம் காமம் மட்டும்தானா காமம் வடிந்தபின் காதல் முடியுமா என்று பொய்யாய் சலித்தாய்.

அடி காமபூரணி.
மொழிகள் தோன்றுமுன்னே இவ்வுலகில் ஒலித்த பேரொளி காமம். எவ்வளவு கலந்தும் திரியாத சலியாத தூய நீராடல் இந்தக் காமம். வாழ்வின் பூரணம் காதல். காதலின் பூரணம் காமம். இங்குப் பூரணம் என்பது முழுமையடைந்தது அல்ல. முழுமையாகிக் கொண்டிருப்பது. முடிந்த செயல் அல்ல . முழுமையைத் தேடும் தொடர் வினை. காதலின் முடிவோ காமத்தின் முழுமையோ கடவுள் கூடக் கடந்ததில்லை. இன்னும் எத்தனை சிலைகளில் சமைந்து கொண்டிருக்கிறது அந்த உணர்வுத் திரட்டு. நாம் கடவுளுக்கும் மேலானவர்கள். எக்காலமும் நிறைந்து கொண்டே இருக்கும் நம் காதலும் காமமும்.
*

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு