நலமறிதல்


எவ்வளவு தடுத்தாலும் உடலைப் பற்றிய சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. கேளிக்கைகள், நண்பர்கள், இலக்கியங்கள் எப்படி இழுத்துப் பிடித்தாலும் உடல் தன் ஒரு புருவத்தை அடிக்கடி உயர்த்திக் கொண்டே இருக்கிறது. “நலமறிதல் – அவதானிப்புகளும் – விவாதங்களும்” ஜெயமோகன் எழுதிய நூல். நவீன மருத்துவம், இயற்கை நலம், அகநலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துத் தன் பட்டறிவோடும், படிப்பறிவோடும் களமாடி இருக்கிறார். அலோபதி மருத்துவ முறையின் அரூப  வலைகளை முடிந்தளவு அறுக்க முயல்கிறார். அதே நேரத்தில் இது மருத்துவ ஆலோசனை அல்ல. உடலை வேடிக்கை பார்ப்பவனின் கவனிப்புகள் மட்டுமே என்று தன்னைத் தற்காத்து, படிப்பவரின் அகத்தில் ஓர் அழுத்தத்தையும் விதைக்கிறார். அகத்தைப் பற்றி எழுதும்போது பொதுவாக எழுத்தாளர்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். ஜெமோ கூடுதலாகத் தோள் மீதும் கை போட்டுக் கொள்கிறார். அரதி பற்றிய சொல்லாடல்கள் அப்படி ஒரு தோழமை சுட்டல்கள். கர்மா பற்றியும் காமம் பற்றியும் ஜெமோ எழுதியதை அப்படியே எழுதினால் தான் அது கர்மாவுக்கும் காமத்துக்குமான மரியாதை.
"கர்மா என்பதெல்லாம் ஊகங்களே. அவற்றைப்பற்றி ஒரு நெருக்கடியில் சிந்தனை செய்வதில் எந்தப் பயனும்  இல்லை. மண் மீது கோடான கோடி உயிர்கள் பிறந்து வாழ்ந்து மறைகின்றன. இந்தச் சுழற்சியின் காரண காரியம் என்பது நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அதற்காக மனிதன் உருவாக்கிய ஒரு கோட்பாடு தான் கர்மம் என்பது. உண்மையானாலும் பொய்யானாலும் நம் வாழ்க்கையை அது மாற்றப்போவதில்லை. இந்த வாழ்க்கையில் நம்முன் உள்ளது நம்மைச் சூழ்ந்த இயற்கையும் நம் உடலும் மனமும் ஓடிச் செல்லும் காலமும் மட்டுமே".
"காமம் என்பது உடலுக்குள் உறையும் கட்டற்ற மாபெரும் ஆற்றல். காமம் நெருப்பு போல. அது அடுப்புக்குள் தீபத்தில் தான் இருந்தாக வேண்டும். ஆனால் நீங்கள் குளிர்ந்து போய் இருக்கிறீர்கள்.வீட்டுக்கூரையை எரித்தாவது வெம்மை பெறுவது நல்லது.  அது உருவாக்கும் அபாரமான உயிர் ஆற்றல் உங்களின் சில்லிட்ட அகத்தில் எத்தனை புத்துணர்ச்சியை உருவாக்குகிறது என்று பார்ப்பீர்கள்."
இதைப் படிக்கும் பொழுது இளமையின் குறும்புகள் ஜெமோவையும் இழுத்து வந்து தொடைக்கு மேலே வேட்டியை கட்டுவதும் அவிழ்ப்பதுமாய் துள்ளல் ஆட்டம் போடுகின்றன. அந்த நேரத்திலும் ஜெமோ காமத்தை உடல்களின் இணைப்போடு நிறுத்தாமல் காமம் வாழ்வின் மீது கொண்ட விருப்பு என்று சொல்லி வாழ்க்கையையும் மனித மனங்களையும் இணைக்கிறார். பொதுவாக எந்த ஒரு கலையையும் கலைப்படைப்பையும் அனுபவித்த பின் நமக்குள் ஏதோ ஒன்று நிறைந்திருக்கும். ஆக்கிரமிப்பு செய்யும். எடுத்துச் செல்ல ஒன்று இருக்கும். இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் தோன்றியது ஒன்றுதான்.
"உடம்பைப் பார்த்துக்கணும். கூடவே மனதையும்".

 பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி

Comments