நவகாளி யாத்திரை

1946ன் இறுதியில் ஒருங்கிணைந்த இந்தியாவில் வங்காளத்தில் நவகாளி என்னும் கிராமத்தில் மதக் கலவரம் ஏற்படுகிறது. இரு மதங்களிலும் கொல்லப்பட்ட எல்லா மனிதர்களிடமிருந்து ஒரே வண்ணத்தில் ரத்தம் வெளியேறுகிறது. இரு பக்கங்களிலும் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வீடுகளில் இருந்து ஒரே மாதிரியான கருகிய வாசனை வருகிறது. வல்லுறவு செய்யப்பட்ட பெண்கள் அனைவரின் ஓலங்களும் ஒரே மாதிரியாகக் கேட்கின்றன. இருந்தும் அந்தக் கலவரம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை அகரீதியாக ஏற்றுக் கொள்ள வைத்த சம்பவம். நவகாளி நோக்கி மகாத்மா கிளம்புகிறார். ஒரு பக்கம் அவர் மீது கொண்ட அன்பினால் அவரைத் தடுக்கின்றனர். மறுபக்கம் இது கண்துடைப்பு என்று அவரை வெறுக்கின்றனர். விளைவுகளில் கவனம் வைக்கும் மகாத்மாக்கள் வினைகளைப் பற்றித் துளி கூடக் கவலைப்பட மாட்டார்கள். மகாத்மா கிளம்பிவிட்டார். எழுத்தாளர் சாவி அவர்களின் நவகாளி யாத்திரை நூல் மேற்கண்ட கலவரங்களைப் பற்றியது அல்ல. நவகாளி யாத்திரையில் மகாத்மாவுடன் பயணிக்கத் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பிய பத்திரிகையாளரின் அனுபவக் குறிப்பு. இரண்டு நாட்கள் மகாத்மாவுடன் பயணித்த எழுத்தாளரின் பிள்ளைத்தமிழ். இவ்வளவு முக்கியமான ஓர் அனுபவத்தை இவ்வளவு பகடியுடன் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் சாவியால் முடிந்திருக்கிறது. வெறும் கால்களோடு யாத்திரை மேற்கொண்ட மகாத்மாவுடன் தாம் மட்டும் செருப்பு அணிந்து நடப்பதா என்று நினைத்த சாவி அவர்கள் தன் செருப்புகளைக் கழற்றி வைத்துக் கொள்கிறார். அதைச் சொல்லிவிட்டு தன்னுடைய செருப்புகளில் ஒன்று அறுந்து போய்த் தன்னோடு ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியிருந்தது என்று நேயர்களுக்குக் காதோடு சொல்லி வைக்கிறார். இன்னொரு சம்பவம் மகாத்மா காலணி அணியாமல் இருப்பதைக் கேள்விப்பட்ட அவரின் பக்தர் பஞ்சாபி சோல்ஜர் ஒருவர் மிதியடிகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதை வாங்க மறுக்கும் மகாத்மாவோ "இந்தியாவில் 40 கோடிமக்களும் ஓர் ஏழை எளியர் கூடப் பாக்கி இல்லாமல் செருப்பு அணிந்து கொள்ளும் காலம் ஏற்படும்போது நானும் அணிந்து கொள்வேன். அதுவரை வெறுங்காலுடனே தான் நடப்பேன்" என்று சொல்லிப் பக்தரைத் திருப்பி அனுப்புகிறார். இரண்டு மூன்று பத்திகள் கடந்து அதே மகாத்மாவுக்கு வெள்ளைக்கார சோல்ஜர்கள் ஒரு பெரிய அட்டைப்பெட்டியைப் பரிசாகக் கொடுக்கின்றனர். அதில் முதலில் தென்பட்டவை சிகரெட் பாக்கெட்டுகள். உயர்ந்த சிகரெட்டுகளைக் கண்டால் நேருஜிக்கு ரொம்பப் பிடிக்கும் ஆகையால் இந்தச் சிகரெட்டுகளை ஜாக்கிரதையாக வைத்திருந்து நேருஜி இங்கே வரும்போது அவரிடம் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அதைப் பத்திரப்படுத்திக் கொள்கிறார். இதை அழகியல் முரணா தத்துவ முரணா எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது தெரியவில்லை. சில சமயங்களில் மகாத்மாவின் இந்த யாத்திரையை சாவி மொத்தமாகக் கிண்டல் செய்கிறாரோ என்கிற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. மகாத்மாவுடனான யாத்திரையை இரண்டு நாட்கள் முடித்துவிட்டு விடை பெறச் செல்கிறார் சாவி. புன்னகையோடு வழியனுப்பிய மகாத்மா ஹரிஜன நிதிக்கு சாவியிடம் கைகளை நீட்டுகிறார். கண்களில் இருந்து வழிந்த கண்ணீரோடு பத்து ரூபாயை மகாத்மாவின் பாதங்களில் காணிக்கையாக்கிவிட்டு ஊர் திரும்புகிறார் எழுத்தாளர் சாவி. புனிதர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள் திறந்தே இருந்தாலும் அதில் புதிர்களால் நிறைந்த பக்கங்களுக்குப் பஞ்சமில்லை. பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி

Comments