இருதயத்தை நோக்கி இரு உரைகள்
'சூழலியலைக் காக்கத் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்த எல்லா உயிர்களுக்கும்' என்ற படையலோடு தொடங்குகிறது இந்தப் புத்தகம். 1852 ஆம் ஆண்டுச் செவ்விந்தியச் சமூகத் தலைவன் ஸீயாட்டில் எழுதியதைத் தமிழில் பிரசன்னா ராமஸ்லாமி மொழிபெயர்த்த ஒரு கட்டுரையும், தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி சாப்ளின் பேசும் உரையை விசுவாமித்திரன் மொழிபெயர்த்த இன்னொரு கட்டுரையும் இந்த நூலை நிறைக்கின்றன. 'வாஷிங்டனில் இருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாகச் செய்தி அனுப்பி இருக்கிறார்' என்று தொடங்கும் முதல் உரை இயற்கையின் மீது மனிதம் கொண்டிருந்த, கொள்ள வேண்டிய காதலைப் பேசுகிறது. அதிகாரத்தை நோக்கி மனம் அடைய வேண்டிய மாற்றத்தை அடுத்த உரை நகர்த்துகிறது. சமகாலச் சூழலுக்கு மிக முக்கியமான தேவையாக இந்த ஈர் உரைகளும் இருந்தாலும் 1800களிலேயே சூழலியலைக் காக்க வேண்டிய தேவை இருந்ததைச் சொல்லும் முதல் உரை ஆச்சரியமானது. அந்த ஆச்சரியத்தோடு சேர்ந்து இன்னொரு ஆச்சரியம் 20 பக்கமே இருந்தாலும் இந்த இரு உரைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து புத்தகமாக்கி இருக்கும் தன்னறம் பதிப்பகத்தின் அக்கறை. கருவிற்கு ஏற்ற அட்டைப்படம், இன்னுமொரு மொழிபெயர்ப்பு முன்னுரை, இரண்டு கவிதைகள் என வடிவமைப்பில் காட்டிய நேர்த்தி பதிப்பகத்தை நேசிக்கச் சொல்கிறது. தொடர்ந்து இயங்குங்கள்.
புத்தகத்தில் உள்ள இரண்டு கவிதைகள்.
சிறுமி கூவுகிறாள்:
நான் போகிற இடம் எல்லாம் நிலாகூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்:
இல்லை. நிலா என்கூட வருகிறது.
இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு திருப்பத்தில் பிரிந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்து, உடன்வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே.
அவள் சின்ன அலையைப் போல் சுருண்டாள்.
அந்தச் சின்ன அலையில்
கரையத் தொடங்கியது நிலவொளி.
எல்லோர் கூடவும் போன நிலா பிறகு எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை.
- தேவதச்சன்
வெயில் தானாகவே
சொல்லிக் கொள்கிறது
ஒரு மழை அடிச்சா
நல்லா இருக்கும்.
- வண்ணதாசன்
நல்லா இருங்க தன்னறம் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் குழு.
Comments