கழி ஓதம்
“ஜிப் பழுதாகிய
பழைய கவுன் பின்திறப்பின்
மேலிருமுனை இழுத்து
ஊக்கு குத்திவிடுகிறாள் தாய்
முழுவதும் மூடாமல்
படகு வடிவில்
திறந்து தெரிகிறது
மகளின் முதுகு
எண்ணெய்க்குறைவினால்
பழுப்பு நிறமான கேசம்
பின்னப்பட்டதும் மரத்துடுப்பாகி
படகின்மேல் அமர்கிறது
இனி புத்தகப்பையை மட்டும்
ஏற்றிவிட்டால் போதும்
கரை சேர்ந்துவிடும்
இந்தப் படகு”
என்ற கவிதைக்குச் சொந்தக்காரரான கவிஞர் ரம்யா அருண் ராயன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு “கழி ஓதம்”. கவிஞர் என்ற தன்னியல்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுதப்பட்ட இத்தொகுப்பில் தேவையான இடத்தில் மட்டுமே கவிஞரானது சிறப்பு. சிறுகதை அல்லது நாவல் முழுவதும் கவிதையாகவே எழுதுவது, வாசகர்களையும் அந்தக் கவிதை உலகத்தில் இருந்து தப்பித்து விடாது கெட்டியாகப் பிடித்து வைப்பது என்பது பகீரதப் பிரயத்தனம். அது கிருபாக்களுக்கும், யூமாக்களுக்குமே வாய்த்த அரும்பெரும் வரம் என்பது என்னளவில் உணர்ந்தது. தலைப்பும், ஆசிரியர் குறிப்பும் மற்றும் முதல் கதையும், கடல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வை மையப்படுத்தியே எழுதி இருப்பார் என்ற முன்முடிவை மாற்றி வைத்தன தொகுப்பின் பன்னிரண்டு கதைகள். இரண்டு கதைகளில் மட்டும் கடலோடு வாழ்ந்துவிட்டு மற்றவற்றில் மொழியை அலை போலப் பரப்புகிறார். வேறு வேறு களங்கள், வேறு வேறு வாழ்வியல். அதே நேரத்தில் வேறுபடுத்திக் காட்டுவதற்காக மாய உலகத்தில் சிக்க வைக்கமால், யதார்த்த உலகில், அவரவர் வீடுகளையும் மனங்களையும் மட்டுமே சுற்றி வருகின்றன கதைகள். பெரும்பான்மையான கதைகள் ஒவ்வொன்றும், நிகழும் கதை மற்றும் அதை நிகழ்த்திய இன்னொரு கதை என இரட்டை கதைகளுக்குள் பயணிக்கின்றன. மையக்கதையிலிருந்து விலகாத கிளைக்கதைகள், வாசகரையும் வேறு எங்கும் விலகாமல் பார்த்துக் கொள்கின்றன. மையத்தையும் கிளையையும் இணைக்கும் புள்ளி பல இடங்களில் இயல்பாகவும், சில இடத்தில் வலிந்தும் வைக்கப்பட்ட உணர்வைத் தருகின்றது. இருந்தும் கதைக்கான உழைப்பும் , குறிப்பிட்ட வாழ்வியலைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற முனைப்பும், அந்த உணர்வை எளிதாகக் கடக்க வைக்கின்றன. பல இடங்களில் நுட்பமான சித்தரிப்பு, தகவல்கள் ரம்யாவின் அக்கறையைக் காட்டுகின்றன. . வேண்டுமென்றே திணிக்காது வாழ்ந்த இடங்களில் இருந்து வந்த வட்டார மொழி கதைகளை உண்மைக்கு அருகில் நிறுத்துகின்றது. எந்தச் சிறுகதைத் தொகுப்பையும் தொடர்ந்து வாசிப்பதன் அயற்சியைத் தன் மொழியால் சரி செய்கிறார் . ஒரு கதையில், நெற்றியில் இட்ட விபூதி சுருங்கி விரிவது , ஒரு பறவை கிளையிலிருந்து உந்தி பட்டெனப் பறப்பது போல இருக்கிறது என்பார் கவிஞர் ரம்யா.. தொடந்து பறந்து அவருக்கான வானத்தை வரைய வாழ்த்துகள்.
பதிப்பகம் : எழுத்து பிரசுரம்
Comments