கவிதையின் அந்தரங்கம்

"கவிதை என்றால் என்ன?  கவிதை பற்றிய விளக்கங்கள் என ஆயிரம் வந்து கொண்டிருக்கும் போது கவிதை பற்றி நான் என்ன எழுதுவது" என்று கவிஞர் இசை, தன்னுடைய ஒரு கவிதைத் தொகுப்பில் ஒருவித அசௌகர்யத் தொனியில் சௌகரியமாக ஒரு முன்னுரை எழுதியிருப்பார். ( அந்தக்காலம் மலையேறிப்போனது என்று நினைக்கிறேன்). கவிதைகள் குறித்து ஆயிரம் விளக்கங்கள் பார்வைகள் வந்தாலும் கவிதை பற்றிய தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். கவிதை, மொழியை உருமாற்றும் உணர்வா அல்லது உணர்வுகளை உருட்டி விளையாடும் மொழியா என்ற சண்டைகள் இடது மூளைக்கும் வலது மூளைக்கும் இடையே நிகழ்ந்து கொண்டே இருக்கும். சண்டைகளுக்கு நடுவே மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில நூல்கள் உதவுகின்றன. கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களின் கவிதை ரசனை நூல் நவீனக் கவிதைகள் குறித்தான அச்சத்தையும் இருண்மையையும் முற்றிலும் துடைத்தெறிய உதவிய நூல். போலவே எழுத்தாளர் க.வை.பழனிசாமி அவர்களின் 'கவிதையின் அந்தரங்கம்' என்ற இந்த நூல் கவிதைக்குள் இருக்கும் கவிதையைக் கண்டடையும் உத்தியைப் பேசுகிறது. ஒரு கவிதையில், கவிதை சொல்லி பிறக்கும் இடத்தையும், கவிதை மொழி ஆர்ப்பரிக்கும் இடத்தையும் தனது பார்வையில் விளக்குகிறார். பார்வைகள் மாறுபட்டவை. ஆனால் அது குறித்தான பதிவு அவசியமானது. கவிஞர்கள் ந பிச்சமூர்த்தி, சி மணி,பிரமிள், ஞானகூத்தன், நகுலன், எஸ் வைத்தீஸ்வரன், சுந்தர ராமசாமி, தேவதச்சன், ஆத்மாநாம்,ஆனந்த், சுகுமாரன், க மோகனரங்கன், ஷாஅ, பெருந்தேவி, மாலதி மைத்ரி மற்றும் அனார் ஆகியோர்களின் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் மேற்கண்டவர்களின் கவிதைகளை மீள் வாசிக்கக் கோருகின்றன. கவிதை குறித்த அணுகு முறையில் மாறுபட்ட பார்வைகளின் அவசியத்தை உணர்த்துகின்றன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு நூலை உருவாக்குவதற்கான உழைப்பு தெரிகிறது. கவிதை நேயர்கள் வாசித்து நெருங்க வேண்டிய தொகுப்பு. ஏனெனில் , கவிதை மழை முடிச்சுகளைக் கொண்ட மேகமாய், விலகி இருப்பவர்களை அண்ணாந்து பார்க்கச் செய்யும் . நெருங்கி வருபவர்களைக் கட்டிலில் அலையாகும் துணையாய் இறுக்கிக் கட்டிக்கொள்ளும். 

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்


Comments