ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு

'ஓயாது நடந்த 
அவநியின் பாதங்களைத் 
தொட்டுப் பார்க்கிறேன்.
குட்டிப் பாதங்களில் 
வீட்டின் நீள அகலங்கள் 
சுருண்டு கிடக்கின்றன'

அவனிதாவின் சொல் என்ற புத்தகத்தில் எழுதி இருப்பார் கவிஞர் நீதிப்பாண்டி. இங்கு வீடு என்பதை ஒரு குறியீடாக மட்டுமே பார்க்கிறேன். தனது வாழ்வின் நீள அகலங்களைப் பிள்ளைகளின் பாதக்குழியில் கண்டடைவதன் மகிழ்ச்சி சொல்லி மாளாது. தீராத அந்தக் காதலை எழுதித் தள்ளி இருக்கிறார் சீடர் ஜெமோ. தன் மகளின் சிறுவயது நடையை,உரையை, உடையை, குறும்புகளை, அழிச்சாட்டியங்களை ஏன் தொப்பையைக் கூடத் தனக்கு மட்டுமே சொந்தமான சொற்களில் நூலாக்கி உள்ளார். தாயின் கர்ப்பபைக்குள் இருந்த சைதன்யாவின் விரல்களில் தொடங்கி சைதன்யாவின் ஒவ்வொரு அசைவுகளிலும் ஜெமோ ஒரு புதிய தரிசனத்தைக் கண்டடைகிறார். இங்கு எல்லோர் வீடுகளிலும் சைதன்யாக்களும் அந்தத் தரிசனம் பெறும் தகப்பன்களும் இருக்கிறார்கள். ஆனால் ஜெமோவிற்கு அதை நூலாக்கும் வரம் கிடைத்திருக்கிறது. எந்த ஒரு பத்தியையும் ஒரு மெல்லிய சிரிப்பின்றி கடக்க முடியவில்லை. சமயத்தில் தன் எழுத்துக்களைத் தானே சுய பகடி செய்து கொள்கிறாரோ என்று நினைப்பும் வருகிறது. மகளைப் பற்றிய புத்தகத்தில் கூட ஆங்காங்கே கம்யூனிசத்தையும் காம்ரேட்களையும் கிள்ளிவிட்டு செல்வது ரசித்துச் செல்லவா நொந்து கொள்ளவா தெரியவில்லை. இருந்தும் சைதன்யாவைப் போலவே ஏன் சைதன்யாவை விட ஒரு படி அதிகமாகவே ஞானபிச்சையிடும் இதழினியைப் பற்றி நாம் ஏன்  ஒரு தொகுப்பு படைக்கவில்லை என்று ஆதங்கம் தரும் படைப்பு. 

பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி

Comments