சின்னச் சின்ன ஞானங்கள்

குழந்தைகளோடு பேசும்போதும் சரி குழந்தைகளைப் பற்றிப் பேசும்போதும் சரி என் நினைவில் எப்போதும் தெறிக்கும் கவிதைகள் இரண்டு.

“புத்தநிலை கூடுதல் தூரம்
திரும்பிச் செல்லுங்கள்
பக்கத்தில்தான் குழந்தை நிலை”

கவிஞர் யாழிசை மணிவண்ணனின் கவிதை. அடுத்தது கவிஞர் யூமா வாசுகியின் ஒரு முயல் கவிதை..யாழிசை கவிதை கை நீட்டிக் காண்பிக்கும் தத்துவ உலகத்தை நம்மைக் கழுத்தில் ஏற்றி காண்பித்துக் கொண்டாடுபவர்கள் யூமாவின் அந்த முயலும் சிறுமி புவனாவும். 

கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க விரும்புகிறவர்களெல்லாம் குழந்தைகளைப் போல ஆக வேண்டும் எனும் யேசு கிறிஸ்துவின் உபதேசத்தை, உச்சமானதொரு உண்மையாகவே நம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்லும் நித்ய சைதன்ய யதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு “சின்னச் சின்ன ஞானங்கள்”. மலையாளத்திலிருந்து இந்தத் தொகுப்பைத் தமிழுக்கு மொழிப்பெயர்த்திருப்பவர் கவிஞர் யூமா வாசுகி எனும்போதே இந்நூலின் தேவையை உணரலாம். பதினேழு கட்டுரைகளாகக் குழந்தைகளை மையப்படுத்தித் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் பெரியவர்களுக்காக எழுதப்பட்டவையே. சுயமுன்னேற்ற நூல்களைப் போல அனுபவங்களையும் தரவுகளையும் நிறைத்து வந்திருக்கின்றன. யூமாவின் அக்கறை நூலில் தனித்தே தெரிகிறது. குழந்தைகளை நேசிப்பவர்கள், கையாள்பவர்கள் அதே பொறுமையோடு படிக்க வேண்டிய நூல்.

பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி

Comments