நீர்வழிப்படூஉம்
“ஒரு ஊர்ல..” என்று ஆரம்பித்த கதைகளாலேயே நம்முடைய பால்யங்கள் நிரம்பி வழிந்தன. ஆரம்பித்ததற்குப் பிறகு அந்த ஊர் எங்குச் செல்லும் என்று தெரியாது. மனிதர்கள் வருவார்கள். விலங்குகள் வரும்.. பறவைகள் வரும் ..தேவதைகள் வருவார்கள், பேய் பிசாசோடு சேர்த்து நீதி கூட வரும்..ஆனால் ஒரு போதும் அந்த ஊர் திரும்பி வந்ததாக நினைவில் இல்லை. சொல்லப்பட்ட அந்தக் கதைகளுக்கும் சொல்லவே படாத அந்த ஊருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அந்தக் கதைகளில் அந்த ஊரின் தேவையென்ன ? அந்த ஊருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என்ன ? தெரியாது. கவிதைகளில் வரும் பெயர் தெரியாத பறவை..பெயர் தெரியாத மரம்..பெயர் தெரியாத மற்றும் பல போல எந்தப் பெயரும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட அந்த ஒரு ஊர் அப்படி என்ன பாவம் செய்தது. இப்படி எவ்வளவோ கேள்விகளைக் கேட்கும் சிறுபிள்ளைத்தனங்கள் உண்மையிலேயே அந்தச் சிறுவயதில் வாய்க்கவில்லை. சரி.... பால்யங்கள் கடந்துவிட்டன.வயதாகிவிட்டது..இவ்வளவு அதிமேதாவித்தனங்கள் இருந்தும் நம் பிள்ளைகளுக்கும் அதே “ஒரு ஊர்ல” என்று ஆரம்பித்தே கதைசொல்லும் நேர்த்திக்கடனைச் செய்கிறோம். நமது பிள்ளைகளும் வருங்காலங்களில் இந்தச் செஞ்சோற்றுக் கடனைச் செவ்வனே ஆற்றுவார்கள்.
தலைமுறைகளைக் கடந்து அந்த ஊர் நம்மோடு வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும். ஊர் என்று சொன்னவுடன், அந்தச் சொல் நம்மை அறியாது பல காட்சிகளை விரிக்கின்றது. இடப்பக்கமும் வலப்பக்கமும் வீடுகளைக் கொண்ட ஒரு வாழ்க்கை, அதன் நடுவே சாலையாய்ச் செல்கின்றது. எத்தனை மனிதர்கள். எத்தனை உறவுகள் . எத்தனை உணர்வுகள். ஒரு மனிதனுக்குள்ளே இருக்கும் கதைகள் எண்களைத் தாண்டும்போது , ஒரு ஊர் சுமந்து வரும் கதைகளை எதற்குள் அடக்குவது. அதன் கொண்டாட்டங்களை ஓலங்களை யார் இசைப்பது.?
நீர்வழிப்படூஉம் ஒரு ஊரின் கதை.
உறவுகள் வழியாக ஒரு ஊரின் பிறப்பை, வாழ்வை , இறப்பைச் சொல்லும் கதை. காரு மாமா, ராசம்மா அத்தை, முத்து அம்மா, பெரியம்மா, முத்தையன் வலசு பெரியப்பா, சாவித்திரி, ஈசு, நாச்சிபாளையத்தார் அப்பறம் கதை சொல்லும் அந்த “நான்” என அத்தனை பேரும் அசலான மனிதர்கள். கதையும் போலித்தனமற்ற அசலான கதை. கிராமத்தில் இருப்பவர்கள் சூது வாது தெரியாத வெள்ளந்திகள் என்ற மரபை எல்லாம் உடைக்கிறார். கதையின் நாயகனாகச் சொல்லப்படும் காரு மாமாவே, குடும்பத்தை இழந்த தன்னைப் பாதுகாக்கும் அக்காவிடம் தனக்கு வரும் கருணைத் தொகையை மறைக்கிறார். நல்லவனாக இருக்கும் நாயகனை விட்டு என்ன காரணத்திற்காகவோ வேறொருவனுடன் ஓடுகிறாள் ராசம்மா அத்தை. உடன்பிறந்தவனை விட்டுவிட்ட ராசம்மாவை வாய்க்குள் வராததை எல்லாம் பேசி ஏசுகிறார்கள் முத்தம்மாவும், பெரியம்மாவும். குடி மரியாதைக்காகப் பேசிக்கொள்ளாமல் வாழ்கின்றனர் முத்தையன் வலசு பெரியப்பா. இப்படி மனிதர்களை எந்த உணர்வுப் பிசகின்றி மனிதர்களாகவே காட்டியிருப்பது சிறப்பு. தாயக்கட்டையக் கொண்டு இந்தக் கதையின் முடிவை, இன்னொரு வாழ்வின் தொடக்கத்தை உருட்டியிருப்பது நூலாசிரியரின் நுட்பம். அந்த உலோகத் தாயக்கட்டைகளை உள்ளங்கைகளுக்குள் வைத்து மூடும் போது ராசம்மா அத்தை உணரும் குளிர்மை, இடிந்து விழுந்து கிடக்கும் எத்தனையோ சுவர்களின் நடுவே சிறு செடியாய் துளிர்க்கும். ஒரே ஓர் இடறல். கதை தொடக்கத்தில் இருந்து இறுதி வரை கதை காரு மாமாவின் மருமகன், அந்த “நான்” கதை சொல்லுகிறார். அத்தை, மாமா , ஈசு என எல்லா உறவுகளுக்கிடையேயும் படிப்பவர்களை வாழ விடாமல் பக்கத்தில் அமர்ந்து இது கதை இது கதை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இருந்தும் உடையாம்பாளையமும் அதன் உணர்வுக்குழைவும் நம்மைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. புதர் மண்டி , பாழடைந்து, வறட்டுப் பொட்டலாக, மனிதர்கள் வாசமின்றி, நம்மை விட்டுக் கடந்து கொண்டிருக்கும் பாளையங்கள், குளங்கள்,பட்டிகள், குடிகள், மங்கலங்கள் என எத்தனையோ ஊர்களின் சன்னமான ஒப்பாரி நீர்வழிப்படூஉம்.
பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி
Comments